கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 85: எந்த மனிதனும் கர்த்தருடைய கட்டளைகளைப் பூரணமாகக் கைக்கொள்ளக்கூடியவனா?

பதில்: வீழ்ச்சிக்குப்பிறகு எந்த மனிதனும் கர்த்தருடைய கட்டளைகளை இவ்வுலக வாழ்க்கையில் பூரணமாக கைக்கொள்ள முடியாதவனாக இருக்கிறான். ஆனால், அனுதினமும் தனது சிந்தனைகளாலும், வார்த்தைகளாலும், செயல்களாலும் அவற்றை மீறுகிறான்.

(பிரசங்கி 7:20; 1 யோவான் 1:8; கலாத்தியர் 5:17; ஆதியாகமம் 6:5; 8:21; ரோமர் 3:9-20; யாக்கோபு 3:2-12)

கேள்வி 86: நியாயப்பிரமாணத்திற்கெதிரான எல்லா மீறுதல்களுமே கொடியவைதானா?

பதில்: சில பாவங்கள் அவற்றின் தன்மையினாலும், அவற்றால் ஏற்படுகின்ற சில பாதகங்களினாலும் ஏனைய பாவங்களைவிட கர்த்தருடைய பார்வையிலே மிகவும் கொடியவையாய் இருக்கின்றன.

(எசேக்கியல் 8:6, 13, 15; யோவான் 19:11)

கேள்வி 87: ஒவ்வொரு பாவமும் எதைத் பெறத்தகுதியானது?

பதில்: ஒவ்வொரு பாவமும் இவ்வுலகத்திலும், இனிவரப்போகும் உலகத்திலும் கர்த்தருடைய கோபத்தையும், சாபத்தையும் பெறத்தகுதியானது.

(எபேசியர் 5:6; கலாத்தியர் 3:10; புலம்பல் 3:39; மத்தேயு 25:41)

விளக்கவுரை: கிறிஸ்தவத்திற்கும் ஏனைய எல்லா மதங்களுக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடு கர்த்தர் மனிதனை இரட்சிக்கிறாரா? அல்லது மனிதன் தன்னுடைய சுயமுயற்சியால் இரட்சிப்பை அடைகிறானா? என்ற கேள்விக்கான பதிலிலேயே தங்கியிருக்கிறது. கத்தோலிக்க மதம் உட்பட உலகில் உள்ள சகல மதங்களும் மனிதன் தன்னுடைய கிரியைகளின் மூலம் இரட்சிப்பை அடைவதாகப் போதிக்கின்றன. கிறிஸ்தவத்தின் பெயரில் தவறான போதனையளிப்பவர்களும் இதையே சொல்லுகின்றனர். ஆனால், வேதபூர்வமான கிறிஸ்தவம் கர்த்தர் மட்டுமே மனிதனை இரட்சிக்கிறவராக இருக்கிறார் என்று விளக்குகின்றது. இரட்சிப்பில் அவருக்கு மட்டுமே எல்லா மகிமையும் சேர வேண்டும் என்பது அதன் போதனை. அதுமட்டுமல்லாமல் வேதபூர்வமான கிறிஸ்தவம், மனிதன் தன்னுடைய ஆத்மீக வாழ்க்கையின் ஆரம்பத்திற்கு மட்டுமல்லாமல், அதன் ஆரம்பமுதல் முடிவுவரையும் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் கர்த்தரிலேயே தங்கியிருக்கிறான் என்று விளக்குகிறது. “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று இயேசு கூறுகிறார் (யோவான் 15:5).

Continue reading