பிரசங்கத்தின் அறிமுகம் எப்படி அமைய வேண்டும் என்பதை கடந்த இதழில் ஆராயந்தோம். இதுவரை பிரசங்கத்தின் மிக முக்கியமான அம்சங்களை எல்லாம் தெளிவாகவும், விரிவாகவும் பார்த்து வந்திருக்கிறோம். பிரசங்கத்தின் உள்ளமைப்பு சம்பந்த மான இன்னுமொரு அம்சத்தை இந்த இதழில் பார்க்கப் போகிறோம். இது பிரசங்கத்தில் பிரசங்கிகள் பயன்படுத்த வேண்டிய உதாரணங்களைப் பற்றியது.
பிரசங்கி, பிரசங்க வாக்கியத்தை இலக்கண பூர்வமாக ஆராய்ந்து அதன் முக்கிய போதனையை விளங்கிக்கொண்டு அதன் அடிப்படையில் பிரசங் கத்தைத் தயாரித்து ஆத்துமாக்களுக்கு முன் சமர்ப்பிக்கின்றபோது அந்தப் பிரசங்கத்தில் கொடுக்கப்படுகிற போதனைகளுக்கு தகுந்த உதாரணங் களைக் காட்டி விளக்குவது அவசியம். உதாரணங்கள் விளக்கப்படுகின்ற சத்தியத்தை பளிச்சென்று புரியவைக்க உதவுகின்றன. பல வசனங்களின் முலம் நாம் விளக்குகின்ற செய்தியை அவை சிறுநொடியில் இடிபோல் இதயத்தைத் தாக்கி விளங்க வைக்கின்றன. உதாரணத்திற்கு இயேசு கிறிஸ்து மலைப்பிரசங்கத்தில் பயன்படுத்தியுள்ள சில உதாரணங்களைக் கவனித்துப் பாருங்கள் (மத்தேயு 6:29, 30). நமது இருதயத்தில் கொடிய பாவங்களைத் தலைதூக்கவிட்டால் அவை நமது வாழ்க்கையையே கெடுத்துவிடும் என்பதை விளக்க இயேசு இந்த வசனங்களில் நமது சரீரம் பற்றிய உதாரணங்களைத் தந்து சத்தியத்தை விளக்குகிறார். இப்படி அநேக உதாரணங்களை இயேசு கிறிஸ்து தனது பிரசங்கங்கள் முழுவதும் பயன்படுத்தி இருப்பதைப் பார்க்கிறோம் (மத்தேயு 6:22, 23; 7:3, 4; 7:9, 10; 7:13, 7:16-19). இதைப் பற்றிக் குறிப்பிடும் பிசப் ஜே. சி. ரைல், “அவர் உதாரணத்திற்காகப் பயன்படுத்தாத, அவர் கண்ணில்படாத எந்தப் பொரு ளும் இருக்கவில்லை. . .அவர் போன பாதையில் நடந்து அவரைப் பின் பற்றப் பாருங்கள்” என்கிறார் (Upper Room, 48p, J. C. Ryle).