கேள்வி 88: பாவிகள் தங்களுடைய பாவத்தின் காரணமாக அனுபவிக்க வேண்டிய தேவ கோபத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் தப்ப கர்த்தர் அவர்களுக்கு என்ன வழியை வெளிப்படுத்தியிருக்கிறார்?
பதில்: பாவிகள் தங்களுடைய பாவத்திலிருந்து விடுதலை அடைந்து இரட்சிப்பைப் பெறும் ஒரே வழியாக கர்த்தர் அவர்களுக்கு தன்னுடைய குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
(ரோமர் 1:16; அப்போஸ்தலர் 4:12)
கேள்வி 89: பாவிகள் இரட்சிப்பை அடைவதற்கு கர்த்தர் தன்னுடைய சுவிசேஷத் தின் மூலம் எதை எதிர்பார்க்கிறார்?
பதில்: தங்களுடைய பாவத்தின் காரணமாக அனுபவிக்க வேண்டிய தேவ கோபத் திலிருந்து தப்பி இரட்சிப்பை அடைய பாவிகள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டுமென்றும், ஜீவனுக்குரிய மனந்திரும்புதலை அடைய வேண்டும் என்றும் கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
(அப்போஸ்தலர் 20:21)
விளக்கவுரை: சகல மனிதர்களும் நியாயமாக தேவ கோபத்தையும், சாபத்தையும் அனுபவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வரப்போகும் நித்திய தண்டனையிலிருந்து தப்ப இயேசு கிறிஸ்து மூல மாக வரும் இரட்சிப்பைத் தவிர வேறு வழியில்லை. இதைத் தெளிவாக இந்த வினாவிடை விளக்குகிறது. “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை.” (அப்போஸ்தலர் 4:12).