சம காலத்து தமிழ் பிரசங்கங்களை எடுத்துப் பார்த்தால் அங்கே கோட்பாட்டுப் பஞ்சம் நிலவுவதை சுலபமாக அறிந்து கொள்ளலாம். வேத வசனங்கள் அங்குமிங்குமாக பிரசங்கங்களில் பலர் பயன்படுத்தப்படுகிறபோதும் அவர்களுடைய பிரசங்கங்களின் சாராம்சத்தையும், உட்தாற்பரியத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் மிஞ்சுவது வெறும் கதைகளும், தனிமனித அனுபவங்களும் மட்டுமே. வேதவசனங்களை மட்டுமே விளக்கிப் போதிக்கின்ற பிரசங்கிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவுக்கு மட்டுமே அத்தகைய பிரசங்கிகளை தமிழினத்தில் காண முடிகின்றது.
பிரசங்கங்களில் கோட்பாடுகள் இல்லாமலிருப்பதற்குப் பலகாரணங்களுண்டு. முதலில் பிரசங்கிகளில் பலர் பிரசங்கப் பயிற்சியையோ, அனுபவத்தையோ தங்களுடைய வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளவில்லை. இன்று வேதாகமக் கல்லூரிகளில் அத்தகைய பயிற்சிக்கு வழியுமில்லாமலிருக்கிறது. இரண்டாவதாக, இறையியல் போதனைகளை முறையாகக் கற்றுக்கொள்ளாததால் பிரசங்கிகளுக்கு வேத வசனங்களைப் பயன்படுத்தி சத்துள்ள போதனைகளை அளிக்க முடியாதிருக்கிறது. ஏதாவதொரு தலைப்பின் அடிப்படையில் அங்குமிங்குமாக தெரிவுசெய்யப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாகவே பிரசங்கங்கள் காணப்படுகின்றன. மூன்றாவதாக, கோட்பாடுகள் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற தவறான, வீணான எண்ணத்தைக் கொண்டிருக்கும் அனேக பிரசங்கிகள் அவற்றை முற்றாகத் தவிர்த்து விடுவதால் பிரசங்கத்தில் சொல்லுவதற்கு எந்த சத்தியமும் இல்லாமல் வெறும் சக்கையான சம்பவத் தொகுப்புகளைப் பிரசங்கமென்ற பெயரில் அளித்து வருகின்றனர். நான்காவதாக, வெறும் அனுபவத்திற்கு மட்டும் இடம் கொடுத்து வேதபோதனைகளைப் பெரும்பாலானோர் நிராகரித்திருப்பதால் பிரசங்கத்தைக் கேட்பதைவிட பரவசத்தை அடைவதே விசுவாசத்திற்கு வழி என்ற எண்ணத்தில் அவர்கள் வனாந்தரப் பிரயாணத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் பெரும் பாதிப்புக்குள்ளாகி சத்திய மறியாமல் இருட்டில் வாழ்கிறது தமிழினம்.