தமிழினத்தில் கிறிஸ்தவம் வேத அடிப்படையில் இயங்கி வருகிறதா? என்ற கேள்விக்கு இருதய சுத்தத்தோடு பதிலளிக்க வேண்டுமானால் இல்லை என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. எதற்கெடுத்தாலும் ‘நெகட்டிவ்வாக’ நம்மைப் பற்றிப் பேசுகிறாரே என்று சில உள்ளங்கள் இதை வாசித்து வருத்தப்படலாம். பொறுமையாக நான் சொல்லப் போவதைக் கேட்டுவிட்டு அதற்குப் பிறகு சிந்தித்து பதிலளியுங்கள்.
மிஷனரிகள் விட்ட தவறு
தமிழ் மக்கள் மத்தியில் பணிபுரிய வந்த அனேக மேலைத்தேச மிஷனரி கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள். பட்டரையும், ஜேம்மையும், பிரெட்டையும் வருடக்கணக்கில் கண்ணால் காணமுடியாமல் வாழ்ந்து நம்மக்கள் மத்தியில் நல்லூழியம் செய்திருக்கிறார்கள். வெய்யில் கொடுமையை சகித்துக் கொண்டு, தூசியையும், சூழலின் துர்நாற்றத்தையும், கொசுத்தொல்லையையும் பொறுத்துக்கொண்டு அரும்பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பையும், நல்ல நோக்கத்தையும் பாராட்டத்தான் வேண்டும். குடும் பத்தைப் பலிகொடுத்தும்கூட போகமாட்டேன் என்று பலர் உழைத்திருக்கிறார்கள். கடினமான நம்மொழியைக் கற்று அதில் பேசுவதென்றால் முடியுமா? ஆங்கிலத்தைப் படிக்க நம்மவர்கள் படுகிறபாடுதான் எத்தனை?
இத்தனை நன்மைகளை நமக்காக அவர்கள் செய்திருந்தும் அவர்கள் ஊழியத்தில் ஒரு குறை இருக்கத்தான் செய்தது. அது முழுவதும் அவர்களுடைய தவறல்ல. நம்மக்கள் இயேசுவின் அன்பை ருசிபார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு பணி செய்த அவர்கள் நமது பண்பாடு இயேசுவின் வார்த்தைக்கு ஏற்றபடி மாற்றமடைய பெரிதாக எதையும் செய்யவில்லை. ஒருசிலர் பாடுபட்டிருக்கிறார்கள்தான். ஆனால், அனேகர் அது கைவைக்கக் கூடாத, தீண்டத்தகாததொன்று என்று தொட மறுத்துவிட்டார்கள். சிலர் நமது பண்பாட்டை வேதமாகக் கூட ஏற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஏற்கனவே நான் சொன்னதுபோல் அது அவர்களுடைய முழுத்தவறல்ல. மேலைத்தேய பண்பாட்டில் வளர்ந்த அவர்களுக்கு குழப்பமான நம் பண்பாட்டைப் புரிந்துகொள்வது இலேசான காரியமல்ல. எத்தனை முயற்சி எடுத்தாலும் மேலைத்தேசத்தார் புரிந்துகொள்ளக் கஷ்டமானது நமது தமிழ்ப் பண்பாடு.