கத்தோலிக்க மதத்திற்கெதிரான கடும் எதிர்ப்பு
ஏழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரையும் பல கிறிஸ்தவ குழுக்கள் வரலாற்றில் உருவாகி ஆர்மீனியா, ஆசியா மைனர், பல்கேரியா, பொஸ்னியா பால்கன் நாடுகள், நெதர்லாந்து என்று பல தேசங்களில் பரவியிருந்தன. பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பெர்காட்ஸ் (Beghards) என்று அழைக்கப்பட்ட ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு பகுதியினர் நெதர்லாந்தில் ரைன் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பரவியிருந்தனர். பன்னிரெண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் தெற்கு பிரான்சில் அல்பிஜென்சஸ் (Albigenses) என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் வளர்ந்திருந்தனர். வட இத்தாலியில் இக்காலப் பகுதியில் வளர்ந்திருந்த வர்களே வல்டேன்சஸ் (Waldenses) என்ற பிரிவினர்
இவர்கள் எல்லோருமே கத்தோலிக்க மதத்தில் காணப்பட்ட போலிப் போதனைகளுக்கு எதிராக இருந்தனர். இப்பிரிவினர் தங்களுடைய காலத்தில் அநேகரைக் கவர்ந்திழுத்தனர். மிகுந்த வைராக்கியமுள்ள பெருந் தொகையினர் இப்பிரிவினரைப் பின்பற்ற ஆரம்பித்தனர். இப்பிரிவுகள் எல்லாமே தெளிவான வேதபோதனைகளைப் பின்பற்றின என்று கூற முடியாது. அத்தோடு எல்லாமே ஒரேவிதமான போதனைகளையும் கொண்டிருக்கவில்லை. இவற்றில் சில பிரிவுகள் தவறான போதனைகளையும் கொண்டிருந்தன. கத்தோலிக்க மதம் இவர்களை மனிக்கேனியர்கள் (Manichaeans) என்று குற்றஞ்சாட்டியது. அதாவது, இவர்கள் மணி என்ற மனிதனின் போதனைகளையும், நடைமுறைகளையும் பின்பற்றினார்கள் என்பது அந்தக் குற்றச்சாட்டு. மணி (Mani) கிறிஸ்தவத்தையும், சௌராஷ்டிரியனிசத்தையும் (Soroastrianism) ஒன்று சேர்க்க முயற்சி செய்தான். சௌராஷ்டிரியனிசம் ஆதி பெர்சியாவின் (Persia) மதமாக இருந்தது. இந்தப் பிரிவுகள் அனைத்தும் எதைப் பின்பற்றியிருந்தபோதும் இவையனைத்தும் கத்தோலிக்க மதத்தி லிருந்து வேறுபட்ட வாழ்க்கையும், ஆராதனை வழிகளையும் வேத அடிப் படையில் பின்பற்றி தங்களுடைய சொந்த மொழிகளில் தனித்துவத்தோடு இயங்கி வந்தன. இவையனைத்தும் மிகவும் எளிமையான பக்திவிருத்தியுள்ள வாழ்க்கையை நாடி நின்றன. எல்லாப் போப்புகளும் இப்பிரிவுகளைக் கண்டிக்கவில்லை.