இதுவரை பிரசங்கத்தைத் தயாரிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாம் முடிந்தளவுக்கு தெளிவாக ஆராய்ந்திருக்கிறோம். பிரசங்கத் தயாரிப்பில் கவனிக்க வேண்டிய அத்தனை அம்சங்களையும் விளக்கமாக ஆராய்ந்திருக்கிறோம். பிரசங்கம் மிகவும் கீழான நிலை யிலிருக்கும் நம்மினத்து சபைகளில் பிரசங்கம் உயர்ந்த இடத்தை வகிக்க வேண்டுமானால் ஒவ்வொரு பிரசங்கியும் இதுவரை நாம் பார்த்த, படித்த விஷயங்களில் கருத்தோடு கவனம் செலுத்தி உழைத்தால் மட்டுமே அது முடியும்.
இனி பிரசங்கத்தை நாம் கர்த்தரின் துணையோடு நல்ல முறையில் தயாரித்து விட்டோம் என்ற அனுமானத்தோடு தயாரித்த பிரசங்கத்தை பிரசங்க மேடைக்கு கொண்டு சென்று ஆத்துமாக்கள் முன் படைப்பதற்கு அவசியமான, பிரசங்கி கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விஷயங்களை ஆராய்வோம். பிரசங்கத்தை நல்ல முறையில் தயாரித்து விடுவதால் மட்டும் அது நல்ல பிரசங்கமாகிவிடாது. பிரசங்கத்தை நல்ல முறையில் தயாரிப்பது பிரசங்க ஊழியத்தில் 50% பணி மட்டுமே. தயாரித்த பிரசங்கத்தைக் கர்த்தரின் துணையோடு ஆத்துமாக்களின் இருதயத்தைப் பாதிக்கும்படி பிரசங்கிப்பது அடுத்த 50% பணியாகும். அதைச் செய்யாதவரை தயாரித்துள்ள பிரசங்கம் அது எத்தனை நல்ல பிரசங்மாக இருந்தாலும் ஏட்டோடு மட்டுமே நின்றுவிடும்.