கடந்த இதழில் “சீர்திருந்த வேண்டிய தமிழ்ப் பண்பாடு” என்ற தலைப்பில் நமது இனத்தில் சீர்திருந்த வேண்டிய அநேக காரியங்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில் திருமண வயதில் இருக்கும் வாலிப விசுவாசிகளுக்கு சில ஆலோசனைகளைச் சொல்லுவது அவசியமென்று கருதுகிறேன். திருமண வயதில் இருப்பவர்கள் முதலில் காதல், கத்திரிக்காய் என்ற சினிமா மாயையில் அகப்பட்டுவிடாமல் இருப்பது அவசியம். ஒருதலைப்பட்சமான சரீர உணர்வுகளுக்கு நம்மினத்தில் பெயர்தான் காதல். அது இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒத்துவராது. இதற்காக ஒரு ஆணும், பெண்ணும் திருமண வயதில் ஒருவர் மீது ஒருவர் நியாயமாக வைக்கும் அன்பை நான் நிராகரிக்கவில்லை. ஆனால், வாழ்க்கைக்கு ஒத்து வராத, மனங்கள் பொருந்திவராத ஒருதலைப்பட்சமான உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் என்றுதான் கூறவருகிறேன்.
திருமண வயதில் இருக்கும் வாலிபர்களை நமது பண்பாட்டிற்கு அடிமையாக்கி, அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்பதற்காக யாரையோ பார்த்து திருமண பந்தத்தில் இணைத்து வைப்பது நம்மினத்தில் வழக்கம். திருமணத்திற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா? இருவரும் விசுவாசியா? என்பதையெல்லாம் பெற்றோர்கள் கவனிப்பது இல்லை. விசுவாசிகளான ஆண்களும், பெண்களும் பெற்றோர்களுக்கு இணங்கிப்போக வேண்டும் என்பதற்காக அவிசுவாசிகளைத் திருமணம் செய்துகொள்ளுவது நம்மினத் தில் அதிகம். இதைவிடக் கொடுமை இருக்க முடியாது. இது கர்த்தருக்கு செய்யும் துரோகம் என்பதை விசுவாசிகளான வாலிபப் பெண்களும், பையன்களும் நினைத்துப் பார்ப்பதில்லை. பெற்றோர்களுக்கு இணங்கிப் போகாவிட்டால் பெரிய ஆபத்து என்ற ஒரே காரணத்தால் கர்த்தரின் வேதத்தை தூக்கி எறிந்துவிட்டு அவிசுவாசிகளைத் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். வேதம் சொல்லுகிறபடி நமது சமுதாயத்தில் வாழ்வது கடினம், மேல் நாட்டில் என்றால் பிரச்சனை இல்லாமல் வாழ்ந்துவிடலாம் என்றெல்லாம் கதைவிடுகிறவர்களும் உண்டு. அப்படியானால் வேத வாழ்க்கை நமது இனத்திற்குப் பொருந்திவராதா? கர்த்தரின் வழி நமது இனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை இல்லாததா? என்றெல்லாம் கேட்காமல் இருக்க முடியவில்லை. சமுதாயத்துக்குப் பயந்து, பிரச்சனைகளை எதிர்நோக்கத் துணிவில்லாமல் இவர்கள் கிறிஸ்துவை அடமானம் வைக்கத் தயாராகி விடுகிறார்கள். சிலுவையைத் தன் தோளில் தூக்கி கிறிஸ்துவை பின்பற்ற முடியாதவர்களுக்கு கிறிஸ்து எதற்கு? கிறிஸ்தவ திருமணம் எதற்கு?