சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியில் கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக தமிழினத்தின் மத்தியில் அனேகர் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்களும், தனிநபர் சொந்த ஊழியங்களும் இரவில் தோன்றி இருந்த இடம் தெரியாமல் அடுத்த நாளே மறைந்து விடும் காளான்கள் போல் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் பணிகள் மூலம் வேதபூர்வமாக நிலைத்து நின்று நம் சமுதாயத் தில் உறுதியான ஊழியங்களைச் செய்யும் திருச்சபைகள் எத்தனை தோன்றி இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால் அவற்றை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த ஸ்தாபனங்கள் பெரும்பாலும் திருச்சபைகள் அமைப்பதில் எந்த அக்கறையும் எடுப்பதில்லை. சபை அமைக்கிறோம் என்ற பெயரில் எழும் தனிநபர் ஊழியங்களும் அதை ஆரம்பிக்கும் தனிநபருடைய சுயநல நோக்கங்களுக்காகவே பெரும்பாலும் ஆரம்பிக்கப் படுகின்றன. நம்மினத்தில் இந்த ஐம்பது வருட காலத்திற்குப் பிறகும் ராஜாதி ராஜாவான கிறிஸ்து இயேசு அமைத்து வருகின்ற திருச்சபையை இனங்காட்டி, சமுதாயத்தில் ஒளிபரப்பி உயிரூட்டத்தோடு இருக்கும் சபைகளை அதிகம் பார்க்க முடியாமலிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. புறஜாதி மக்கள் கண்டு வியந்து கைகளை உயர்த்தி வணங்க வைக்கும் அளவுக்கு திருச்சபை ஊழியங்கள் இல்லாதிருப்பது நெஞ்சைச் சுடுகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதற்கிணங்க நம்மத்தியில் அவல நிலை யில் இருக்கும் கிறிஸ்தவ ஊழியத்தில் முதல் போடாமலேயே வட்டி வாங்கிப் பிழைக்கும் கூத்தாடிகளும், கூடில்லாக் குருவிகளுந்தான் அதிகம்.