கிறிஸ்துவின் சிலுவை மரணப்பலி பற்றி குழப்பமான சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள் அனேகர். இந்த சத்தியத்தை தர்க்கரீதியில் அணுகி குழப்பத்தைப் போக்க முயல்கிறோம் என்று வேத போதனைகளுக்கு முரணான விளக்கத்தை அளிக்கிறார்கள் சிலர். வேதம் போதிப்பது மட்டுமே சத்தியம். அது நமக்குப் புரியவில்லை, பிடிக்க வில்லை என்பதற்காக நாம் நினைத்தவிதத்தில் அதை மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது. கிறிஸ்துவின் சிலுவைப் பலிபற்றியும் மனித சித்தம் பற்றியும் இனி ஆராய்வோம்.
கிறிஸ்துவின் சிலுவைப்பலி சகல மக்களையும் இரட்சிப்பதை நோக்க மாகக் கொண்டிருந்ததா?
சிலுவையில் கிறிஸ்து இறந்தபோது அவர் இந்த உலகத்துக்கு வந்த காரி யங்கள் அனைத்தும் நிறைவேறி, ‘எல்லாம் முடிந்தது’ (யோவான் 19:30) என்று சொல்லி மரித்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ‘எல்லாம் முடிந்தது’ என்றால் நடந்து முடிந்த காரியங்கள் அனைத்திலும் கிறிஸ்துவுக்கு முழுத்திருப்தி இருந்தது என்றுதான் அர்த்தம். தான் வந்த காரியம் நிறைவேறி விட்டது என்பதில் அவருக்கு முழுநம்பிக்கையும் இருந்தது. யோவானில் அவர் சொல்லியிருப்பதுபோல் தன்னுடைய ஆடுகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தன்னிடம் அழைத்துக் கொள்ளுவதற்கான அனைத்தையும் அவர் நிறைவேற்றிவிட்டார் என்றுதான் அதற்குப் பொருள்.