கடந்த பத்து வருடங்களாக சீர்திருத்தவாதத்தைப்பற்றியும், சீர்திருத்தப் போதனை களைப்பற்றியும் இந்தப் பத்திரிகையில் வெளிப்படையாகவே பலரும் அறிய எழுதி வந்திருக்கிறேன். அதில் எனக்கு எந்தவிதமான வெட்கமோ, தயக்கமோ ஆரம்பத்தில் இருந்தே இருந்ததில்லை. சீர்திருத்தப் போதனைகளை நான் வியாபாரத்துக்காகவோ, என்னை உயர்த்திக்கொள்ளும் சுயநலத்துக்காகவோ பின்பற்றவில்லை. அது என் உயிர்நாடி; வேதம் அப்பட்டமாகப் போதிக்கும் சத்தியம். அதற்கு மாறான போதனை களை, அவை வேதத்துக்கு முரண்பட்டவையாய் இருந்தால் இனங்காட்டவும், வேத அடிப்படையில் அவற்றின் போலித்தனத்தை வெளிப்படுத்தவும் நான் தயங்கியதில்லை. சத்தியத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு முகத்தாட்சண்யம் பார்க்கும் குரங்குத்தனம் இருக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மற்றவர்கள் மனதைப் புண்படுத்துவது எழுதுகிறவனுக்கோ, விசுவாசிக்கோ பணியாக இருக்கக்கூடாது. அதற்காக உயிர் மூச்சாய் விசுவாசிக்கிற சத்தியத்தை மற்றவர்கள் மனஸ்தாபப் படுவார்கள் என்பதற்காக மறைப்பது கோழைத்தனம். “அசத்தியத்தை தோலுரிக்கிற போது சத்தியம் ஒளிருகிறது” என்றார் ஒரு சீர்திருத்தவாதி. சீர்திருத்தவாதிகளான லூதரும், கல்வினும் தம் காலத்தில் எதைச் செய்தார்களோ அதையே நான் செய்யத் துணிகிறேன்; முயற்சித்தும் வருகிறேன். புதிய வாசகர்களுக்காகவும், சீர்திருத்தப் பாதை யில் செல்லத்துணிந்திருக்கிறவர்கள் அந்தப் பாதையில் எதிர்கொள்ள வேண்டிய கடமை களை நினைவுபடுத்திக் கொள்ளுவதற்காகவும் இந்த ஆக்கத்தை எழுதியுள்ளேன். இறையாண்மையுள்ள கர்த்தர் நமது பாதையில் வழித்துணையாக இருந்து நாமும், நமது சபைகளும் தொடர்ந்து சீர்திருந்த உதவுவாராக.
சீர்திருத்தம் என்ற வார்த்தையின் மூலம் நான் எதைக் குறிக்கிறேன் என்பதை இப்பத்திரிகையின் தீவிர வாசகர்கள் நிச்சயம் அறிவார்கள். இருந்தாலும் புதிய வாசகர்களின் பொருட்டு அதை சுருக்கமாக விளக்குவது அவசியமாகிறது. ‘சீர்திருத்தம்’ என்பதற்கு சாதாரண மாக மறுமலர்ச்சி, சீராக இல்லாததை திருத்தி அமைத்தல் போன்ற பொது வான அர்த்தங்கள் உள்ளன. அந்த அர்த்தங்கள் இந்த வார்த்தையில் நிச்சயம் அடங்கியிருந்தபோதும், இதை முக்கியமாக கிறிஸ்தவ வரலாற்று அடிப்படை யில் விளங்கிக்கொள்ளுவது அவசியம். கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் இதை வரலாற்று அடிப்படையிலேயே நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம்; வரலாற்றிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.