கேள்வி 92: புறத்தில் மட்டும் சுவிசேஷத்துக்கு கீழ்ப்படிகிற எல்லோரும் தங்களுடைய பாவத்துக்கான தேவ கோபத்திலிருந்து தப்ப முடியுமா?
பதில்: புறத்தில் சுவிசேஷத்துக்குக் கீழ்ப்படிகிறவர்களல்ல, விசுவாசத்தையும், பரிசுத்தத்தையும் விடாமுயற்சியுடன் இறுதிவரை கடைப்பிடிப்பவர்களே இரட்சிப்பை அடைய முடியும்.
(மத்தேயு 7:21; 1 பேதுரு 1:5; எபிரேயர் 12:14)
கேள்வி 93: இறுதிவரையும் விசுவாசத்தையும், பரிசுத்தத்தையும் விடாமுயற்சியுடன் கடைப்பிடித்து நித்திய இரட்சிப்பை அடைகிறவர்கள் யார்?
பதில்: கர்த்தரின் நித்திய ஆணை, மாறாத அன்பு, கிறிஸ்துவின் வேண்டுதல் ஆகியவற்றின் காரணமாகவும், பரிசுத்த ஆவியும் வார்த்தையும் அவர்களில் இருப்பதன் காரணமாகவும் அனைத்து மெய் விசுவாசிகளும் கிறிஸ்துவுக்குள்ளான அனைத்து ஆத்மீக ஆசீர்வாதங்களையும் கர்த்தரிடமிருந்து பெற்று அவருடைய வல்லமையால் பாதுகாக்கப்படுவதால் நிச்சயமாக தங்களுடைய விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் இரட்சிப்புக்காக விடாமுயற்சியுடன் இறுதிவரை ஈடுபடுவார்கள்.
(ரோமர் 8:28-30; எரேமியா 31:3; எபிரேயர் 7:25; யோவான் 14:16; 10:28-29; 1 பேதுரு 1:5; எபேசியர் 1:3; 1 கொரிந்தியர் 1:8-9; பிலிப்பியர் 1:6)
விளக்கவுரை: முதலில் இந்த இரு வினாவிடைகளும் ஏன் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனிப்பது அவசியம். முந்தைய வினா விடைகள் இரண்டிலும் மெய்யான விசுவாசத்தைப் பற்றியும், மனந்திரும்புதலைப் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருந்ததை அறிவீர்கள். இந்த வினா விடைகள் பரிசுத்தவானுடைய ஆத்மீகக் கடமையான விடாமுயற்சியை விளக்குகின்றன. வினாவிடை 92 விடாமுயற்சியின் அவசியத்தை விளக்குகிறது. வினாவிடை 93 அத்தகைய விடாமுயற்சி இறுதி வெற்றி அடையும் என்பதை விளக்குகிறது. பரிசுத்தவானின் விடாமுயற்சி வேதத்தின் முக்கிய இறையியல் போதனைகளில் ஒன்று; கிருபையின் போதனைகளில் ஒன்று.