இனி பிரசங்கத்தைத் தயாரிக்கும்போது பிரசங்கிகள் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கமாக கவனித்து வந்த நாம் கடந்த இதழில் தயாரிக்கப்பட்ட பிரசங்கத்தை மேடைக்கு கொண்டு செல்லும் போது பிரசங்கக் குறிப்புகளை எந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதைக் கவனித்தோம். ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய உணவளித்து வளர்க்க வேண்டிய உயர்ந்த ஊழியத்தில் இருக்கும் போதகர்கள், பிரசங்கிகள் வேதபூர்வமாக பிரசங்கங்களைத் தயாரித்து அளிக்க இவை உதவியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இவை தங்களுடைய பிரசங்க ஊழியத்துக்கு பெரிதும் உதவியிருப்பதாக எழுதித் தெரிவித்தவர் களுக்கு நன்றி. நம்முடைய பிரசங்க ஊழியத்தால் கர்த்தருக்கே அனைத்து மகிமையும் சேர வேண்டும்.
பிரசங்கங்களை நாம் வேத அடிப்படையில் கஷ்டப்பட்டு ஆராய்ந்து தயாரித்துவிடுவதோடு நமது வேலை முடிந்துவிடுவதில்லை. கடினமாக உழைத்து ஞானத்தோடு பிரசங்கங்களைத் தயாரிப்பது இன்றியமையாதது. அப்படித் தயாரித்த பிரசங்கத்தை ஆத்துமாக்களுக்கு முன் பிரசங்கிப்பது அதன் அடுத்த பகுதியாகும். பிரசங்கத்தை பிரசங்கித்து முடியும்வரை அந்தப் பணி நிறைவேறிவிட்டதாக நாம் கருத முடியாது. எத்தனைக் கருத்தோடு பிரசங்கத்தை உழைத்துத் தயாரித்தாலும் அதை ஆத்துமாக் களுக்கு முன் படைக்காதவரை அதனால் பிரயோஜனம் இருக்காது.