சமீபத்தில் என் கையில் கிடைத்த ஒரு கிறிஸ்தவ பத்திரிகையில் மேற்குறிப்பிட்ட தலைப்பில் ஒரு ஆக்கம் வந்திருந்தது. 1 கொரிந்தியர் 11:5ம் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு சபையில் பெண்கள் முக்காடிட்டு ஆராதனை செய்ய வேண்டும் என்பதை ஆதரித்து அந்த ஆக்கம் எழுதப்பட்டிருந்தது. அந்த ஆக்கத்தை ஆர்வத்தோடு முழுமையாக வாசித்தபொழுது அதை எழுதியவர் எங்குமே 1 கொரிந்தியர் 11:5க்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை என்பதைக் கவனித்தேன். நமது மக்கள் கிறிஸ்தவ வேதத்தின் அடிப்படையில் ஒரு காரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்று நாம் வற்புறுத்துவதானால் அவர்கள் அந்தக் காரியத்தைப் பின்பற்றும்படி வலியுறுத்தும் ஆரோக்கியமான வேதவிளக்கங்களை அவர்கள் முன்பு வைப்பதற்கு முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நமது இனத்தைப் பிடித்திருக்கும் ஒரு வியாதியே எந்தவொரு விஷயத்தையும் வேத அடிப்படையில் இல்லாது பாரம்பரியத்தின் அடிப்படையிலும், பண்பாட்டின் அடிப்படையிலும் நமது மக்கள் மேல் திணிப்பதுதான். அது முழுத்தவறு. வேத ஆதாரமில்லாத எந்தக் காரியத்தையும் எந்தக் கிறிஸ்தவ சபையும், போதகரும், தனி மனிதனும் சொன்னாலும் நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.