ரோம சபையும், சீர்திருத்த கவுன்சில்களும்
போப்பின் அதிகாரத்திற்கெதிரான முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வந்ததை 1409-1449 வரை உருவாகிய மூன்று சீர்திருத்த கவுன்சில்கள் சுட்டிக்காட்டுகின்றன. கத்தோலிக்க சபை அங்கத்தவர்களனைவரதும் பிரதிநிதிகளைக் கொண்டதாகவும், போப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி, அவசியமானால் போப்பை நியாயந்தீர்த்து பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தைக் கொண்டதாகவும் இருக்கும் வகையில் இந்தக் கவுன்சில் அமைக்கப்பட்டது. கத்தோலிக்க மத சீர்திருத்தத்தை நாடிய முதலாவது கவுன்சில் 1409ல் பீசாவில் (Pisa) உருவானது. இந்தக் கவுன்சில் ஒருவருக்கொருவர் எதிர் முனையில் இருந்து செயல்பட்டு வந்த போப்புக்களான 12ம் கிரெகரியையும், 13ம் பெனடிக்டையும் கலகக்காரர்கள், சத்திய விரோதிகள், பொய்யர்கள் என்று குற்றஞ்சாட்டி பதவி நீக்கம் செய்தது. அத்தோடு, அவர்களுடைய இடத்தில் 5ம் அலெக்சாண்டரை (Alexander III) போப்பாகவும் நியமித்தது. இவ்வாறு ஆரம்பித்த சீர்திருத்தத்தைக் கவன்சில் தொடர முற்பட்டபோது புதிதாக நியமிக்கப்பட்ட போப் தன்னுடைய அதிகாரங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்தில் தனக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கவுன்சிலை உடனடியாகக் கலைத்துவிட்டார்.