வேத போதனைகளின்படி திருச்சபை இந்த உலகத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வேதம் காட்டும் தவிர்க்க முடியாத விதிகளை இந்த ஆக்கத்தின் மூலம் விரிவாக ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் முதலாவது விதியான, “திருச்சபைப் பணிகள் அனைத்தும் கர்த்தருடைய இறையாண்மையின் அடிப்படையில் அதற்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும்” என்பதை விளக்கியிருந்தோம். கிறிஸ்து இயேசு ஆண்டு வருகின்ற சபை அவருடைய அதிகாரத்தின்படி, அவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும் என்பதே இந்த விதியாகும். இனி நாம் இரண்டாவது விதியை ஆராய்வோம்.
(2) கர்த்தரின் வார்த்தை சகல அதிகாரத்தையும் தன்னில் கொண்டு அனைத்தின் மீதும் அதிகாரமுள்ளதும், சகலதுக்கும் போதுமானதாகவும் இருக்கின்றது என்பதே இரண்டாவது விதி.
சுவிசேஷத்தை அறிவித்து திருச்சபை அமைப்பாகிய மிஷன் ஊழியத்தில் ஈடுபடுகின்ற சபைகள் வேதம் பற்றிய இந்த நம்பிக்கை இல்லாமல் அந்தப் பணியில் ஈடுபட முடியாது. வண்டிகள் ஓடுவதற்கு பாதைகள் தேவை. அதே போல்தான் திருச்சபை அமைப்புக்கு வேதம் பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கைகள் அவசியம். வீடு கட்டுவதற்கு திட்டமிடும் என்ஜினீயர் அதற்கு வரைபடம் போடுவார். அந்த வரைபடத்தைக் கவனமாக வரைந்து அந்த அடிப்படையில் வீட்டைக் கட்டுவார். நமக்கு வரைபடம் வேதம்தான். வரை படத்தை மீறிக் கட்டடத்தைக் கட்டினால் கட்டிடம் உறுதியாக இருக்காது; சட்டரீதியானதாகவும் இருக்காது. பியானோ ஒன்றின் முன் நின்று அதை லாவகமாக இசைக்கின்றவர் தனக்கு முன்பாக இசை நோட்ஸை வைத்திருப்பார். அது அழகுக்காக வைக்கப்படவில்லை. அந்த நோட்ஸை மீறி அவர் பியானோ வாசித்தால் இசை இசையாக இருக்காது. நோட்ஸுக்கு ஏற்ப அதன்படியே இசை அமைய வேண்டும். அதே போல் தான் திருச்சபை ஊழியத்திற்கும் வேதம் பற்றிய உறுதியான நம்பிக்கைகள் அவசியம்; அந்நம்பிக்கைகளின்படி செயல்படுவதும் அவசியம்.