வேதத்தில் விளங்கிக்கொள்வதற்கு கடினமான சில பகுதிகள் உண்டு. சிலர் அவற்றைக் குழப்பமான பகுதிகளாகவும், விளங்கிக்கொள்ளவே முடியாத பகுதிகளாகவும் கருதி அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். வேறு சிலர் அப்பகுதிகளுக்கு தவறான விளக்கங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். வேதத்தை எழுத்தில் தந்திருக்கும் கர்த்தரே விளங்கிக்கொள்வதற்கு கடினமானதாக இருக்கும் பகுதிகளையும் தந்துள்ளார். அவற்றை முறையாக, கவனத்தோடும் ஆவியின் துணையோடும் ஆராய்ந்து படித்தால் கர்த்தர் அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அத்தகைய வேதப்பகுதிகளை வாசகர்களின் நன்மை கருதி ஆராய விருக்கிறோம். போதகர் ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert, Australia) இந்தப் பகுதிகளுக்கு விளக்கமளிக்கிறார்.
இந்த இதழில் நாம், விசுவாசிகள் விழுந்துபோகலாம் அல்லது இரட்சிப்பை இழந்துபோகலாம் என்று விளக்குவதுபோல் தோற்றமளிக்கின்ற ஒரு முக்கிய வசனத்தை ஆராயப்போகிறோம்.
“ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்பு தற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.” (எபிரேயர் 6:4-6).