கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 4

திருச்சபை இந்த உலகத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வேதம் காட்டும் தவிர்க்க முடியாத விதிகளை இந்த ஆக்கத்தின் மூலம் ஆராய்ந்து வருகிறோம். இதுவரை இரண்டு முக்கிய விதிகளைக் கண்டிருக்கிறோம். (1) திருச்சபைப் பணிகள் அனைத் தும் கர்த்தருடைய இறையாண்மையின் அடிப்படையில் அதற்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும் என்பது முதலாவது விதி. (2) கர்த்தரின் வார்த்தை சகல அதிகாரத்தையும் தன்னில் கொண்டு அனைத்தின் மீதும் அதிகார முள்ளதும், சகலதுக்கும் போதுமானதாகவும் இருக்கின்றது என்பது இரண்டாவது விதி. இனி நாம் சுவிசேஷ ஊழியத்தின் மூலம் திருச்சபை அமைக்கும் பணிக்கான மூன்றாவது விதியை ஆராய்வோம்.

(3) சுவிசேஷ ஊழியத்தில் திருச்சபையே அதிமுக்கியமானதும், அடிப்படையானதுமான இடத்தை வகிக்கிறது. சுவிசேஷ ஊழியங்கள் எப்போதும் திருச்சபையில் ஆரம்பித்து திருச்சபை அமைப்பதிலேயே போய் முடியவேண்டும்.

பிரதரனிசம் (Bretherenism), டிஸ்பென்சேஷனலிசம் (Dispensationalism), பினியிசம் (Finneyism), மற்றும் கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் (Para-church organizations) அனைத்தும் வேதபூர்வமான திருச்சபைக் கோட்பாடுகளற்ற ஒரு கிறிஸ்தவத்தை இந்நூற்றாண்டில் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அதாவது, கர்த்தருடைய திட்டங்களில் இந்த ‘இசங்கள்’ திருச்சபையை உன்னத இடத்தில் வைத்துப் பார்ப்பதில்லை. இந்த உலகத் தில் கிறிஸ்தவனுடைய ஒரே பங்கு சுவிசேஷம் சொல்லுவது மட்டுந்தான் என்ற நிலையை இந்தக் குழுக்கள் உருவாக்கியிருக்கின்றன. இதனால் பெயரளவில் ஓய்வுநாளில் ஆராதனைக்கென்று கூடுவதற்காக திருச்சபை என்ற பெயரில் இவர்கள் சாட்டுக்கு கூடிவருகிறார்களே தவிர திருச்சபை பற்றிய அத்தனை இறையியல் போதனைகளையும் உதாசீனப்படுத்திவிட்டு கிறிஸ்துவின் பெயரில் சுவிசேஷம் சொல்லுவதில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்கள்.

Continue reading