சத்தியம் விடுதலையாக்கும்

“. . நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:31, 32)

இவை இயேசு கிறிஸ்து யூதர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள். யூதர்களில் பெரும்பாலானோர் இயேசுவைக் கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். சத்தியத்தை அறிந்துகொள்ள முடியாதபடி அவர்களுடைய கண்கள் குருடாயிருந்தன. சத்தியத்தை அறிந்துகொள்ளாதவர்கள் குருடர்களாக மட்டுமே தங்களுடைய வாழ்க்கையில் இருப்பது மட்டுமல்ல அவர்களுக்கு விடுதலை கிடைக்காது. ஆத்மீக விடுதலை சத்தியத்தினால் மட்டுமே கிடைக்கும் என்பதை இயேசு தெளிவாகவே விளக்கியிருக்கிறார்.

இயேசு வேறு எதையும்விட தன்னுடைய உபதேசத்துக்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அவருடைய உபதேசமே வேதம் முழுவதிலும் அடங்கியிருக்கிறது. அதனால்தான் அவருக்கு “வார்த்தை” என்ற பெயரும் உண்டு. அவருடைய சீஷராக விரும்புகிற எவரும் அவருடைய உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்கிறார் இயேசு. ஆடிப்பாடுவதாலோ, உணர்ச்சிப் பிரவாகத்தால் நாம் விரும்பியதை இயேசுவுக்காக செய்வதாலோ அல்லது பாரம்பரியமாக இருந்துவரும் சடங்குகளைப் பின்பற்றுவதாலோ எவரும் அவருடைய சீஷராக முடியாது. பாரம்பரியத்துக்கு பாலூட்டி வளர்த்த யூதர்களில் பெரும்பாலானோர் அவருடைய சீஷர்களாக இருக்கவில்லை. அவருடைய உபதேசத்தை மட்டும் பின்பற்றி அவற்றில் நிலைத்திருப்பதால் மட்டுமே எவரும் இயேசுவின் சீஷராக முடியும். இதை இன்று தமிழினத்து கிறிஸ்தவம் புரிந்துகொள்ளாமல் தன் மனம்போன போக்கில் இயேசுவைப் பின்பற்றப் பார்க்கிறது. சபைத்தலைமையிலிருந்து அடிமட்ட விசுவாசிகள்வரை இன்று இதே நிலைமைதான்.

Continue reading