‘பிரசங்கிகளின் இளவரசன்’ சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன்
ஜெரமி வோக்கர் – Jeremy Walker
“பிரசங்கிகளின் இளவரசன்” என்று அழைக்கப்படும் சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் தன்னுடைய வாழ்க்கையில் அநேக தாலந்துகளையும், கிருபைகளையும் கொண்டு கர்த்தருக்காகப் பணி புரிந்தார். அவருடைய வாழ்க்கையையும், ஊழியப் பணிகளையும் விளக்கும் எண்ணிலடங்காத நூல்கள் ஆங்கிலத்தில் எழுத்தில் வடிக்கப்பட் டிருக்கின்றன. அவருடைய வாழ்க்கையை நாம் ஆராய்ந்து எழுத முனைகிறபோது, அவரைப் பற்றிய சகல சுவாரஸ்யமான செய்திகளையும் இந்த ஆக்கத்தில் சேர்க்க முடியாமல் போகிறது.
ஆரம்பகால வாழ்க்கையும், மனந்திரும்புதலும்
இங்கிலாந்தில், எசெக்ஸ் மாநிலத்தில் (Essex), கெல்வடன் (Kelvedan) என்ற கிராமத்தில் 1824ம் வருடம் ஜூன் மாதம் 19ம் திகதி பிறந்தார் ஸ்பர்ஜன். தனது வாழ்க்கையின் ஆரம்ப வருடங்களில் சிலவற்றை அவர் ஸ்டெம்போர்ன் (Stambourne) எனும் நகரத்தில் வாழ்ந்த தன்னுடைய தாத்தாவின் வீட்டில் கழித்தார். அவருடைய தாத்தா ஜோண், கொங்கிரிகேஷனல் சபையொன்றின் போதகராக இருந்து வந்தார். ஸ்பர்ஜ னுடைய தந்தையின் பெயரும் ஜோணாக இருந்ததோடு அவரும் ஓர் கொங்கிரிகேஷனல் சபைப் போதகராக இருந்தார். தன்னுடைய ஐந்தாம் வயதில் தாத்தாவின் வீட்டிலிருந்து பெற்றோரிடம் திரும்பினார் ஸ்பர்ஜன். இளம் வயதிலேயே ஸ்பர்ஜன் புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும், தைரியமுள்ளவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே ஸ்பர்ஜன் தன்னுடைய தாத்தாவின் நூலகத்திலிருந்த பியூரிட்டன்களின் நூல்களையெல்லாம் அவற்றிலிருந்த படங்களைப் பார்த்து மகிழ்வதற்காக திறந்து பார்ப்பார். முக்கியமாக ஜோண் பனியனின் மோட்ச பயண நூலையும், ஃபொக்ஸின் கிறிஸ்துவுக்காக இரத்தஞ்சிந்தி மரித்தோரின் நூலையும் (Foxe’s Book of Martyrs) ஆர்வத்துடன் திறந்து பார்ப்பார். அப்போது வாசிக்கும் பயிற்சியில் அவர் ஈடுபட்டு அந்நூல்களை இளம் வயதிலேயே அவர் வாசிக்கவும் தவறவில்லை. காலஞ் செல்லச்செல்ல அவருடைய புத்திசாலித்தனமும், பேச்சு வன்மையும் சிறிது சிறிதாக வெளிப்பட ஆரம்பித்தது.