கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 99: திருமுழுக்கும், திருவிருந்தும் எவ்வாறு இரட்சிப்புக்கேற்ற திருவருட்சாதனங்களாகின்றன?

பதில்: திருமுழுக்கும், திருவிருந்தும் அவற்றில் காணப்படும் எந்த நற்பண்புகளினாலோ அல்லது அவற்றை வழங்குபவர்களில் காணப்படும் எந்த நற்பண்புகளினாலோ இரட்சிப்புககேதுவானவையாகாமல், கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தினாலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளினாலும் விசுவாசத்தோடு அவற்றைப் பெற்றுக்கொள்ளுபவர்களுக்கு அவை இரட்சிப்புக்கேற்ற திருவருட் சாதனங்களாகின்றன.

(1 கொரிந்தியர் 3:6-7; 1 பேதுரு 3:21.)

இந்த வினாவிடைக்கான விளக்கம் நாம் கடந்த இதழில் (12:2) திருவருட் சாதனங்களுக்கு தந்த விளக்கத்தில் அடங்கியுள்ளது.

கேள்வி 100: திருமுழுக்கு (-ஞானஸ்நானம்) என்றால் என்ன?

பதில்: திருமுழுக்கு கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் திருவருட்சாதனமாகும். திருமுழுக்கைப் பெற்றுக்கொள்ளுகிற நபருக்கு அது கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், அவரோடிணைக்கப்பட்டிருத்தல் ஆகியவற்றோடு பாவமன்னிப்புக்கும் அவர் தன்னைக் கிறிஸ்துவின் மூலமாகக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, புதிய ஜீவனுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கும் அடையாளமாக இருக்கின்றது.

(மத்தேயு 28:19; ரோமர் 6:3-4; கொலோசெயர் 2:12; கலாத்தியர் 3:26-27.)

கேள்வி 101: யாருக்கு திருமுழுக்கு அளிக்க வேண்டும்?

பதில்: கர்த்தரிடம் மனந்திரும்புதலையும், இயேசு கிறிஸ்துவில் மேலான விசுவாசத்தையும் நம்பத்தகுந்த முறையில் எவரெல்லாம் அறிக்கையிடுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே திருமுழுக்கு அளிக்க வேண்டும்; வேறு எவருக்கும் அது கொடுக்கப்படக்கூடாது.

(அப்போஸ்தலர் 2:38; 2:41; மாற்கு 16:16.)

விளக்கவுரை: திருவருட்சாதனங்களில் ஒன்றான திருமுழுக்கை நாம் புதிய ஏற்பாட்டிலேயே முதன் முறையாக வாசிக்கிறோம். பழைய ஏற்பாட்டில் இதைப் பற்றி நாம் வாசிப்பதில்லை. மத்தேயு 3:11ல் யோவான்ஸ்நானன் முதல் தடவையாக திருமுழுக்குக் கொடுப்பதாக வாசிக்கிறோம். மத்தேயு 3:6ன்படி யோர்தான் சமவெளியில் இருந்து அநேகர் யோவான்ஸ் நானனிடம் வந்து தங்களுடைய பாவத்தை அறிக்கையிட்டு திருமுழுக்குப் பெற்றுக்கொண்டனர். இந்தத் திருமுழுக்கு மனந்திரும்புதலின் திருமுழுக்காக இருந்தது. திருமுழுக்குப் பெற்றுக்கொண்டவர்களில் மனந்திரும்புதலுக்கான அடையாளங்களை யோவான்ஸ்நானன் எதிர்பார்த்து திருமுழுக்களித்திருக்கிறார் (மத்தேயு 3:8).

Continue reading