அனாபாப்திஸ்து இயக்கம்
சுவிஸ் அனாபாப்திஸ்து இயக்கம்
சீர்திருத்தவாதத்திற்கெதிராக அதன் எதிரிகள் ஜெர்மனியில் ஒன்றுகூடிக் கொண்டிருந்தபோது திருவிருந்து பற்றிய போதனையில் லூதரைப் பின்பற்றியவர்களுக்கும், சுவிஸ் (Swiss) இறையியலறிஞர்களுக்கும் இடையில் தீவிரமான வாக்குவாதம் ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் முக்கியமானவர் சுவிங்லி (Zwingli). ஹெசியைச் சேர்ந்த பிலிப் (Philip of Hesse) 1529ல் மார்பேர்க் (Marburg) என்ற இடத்தில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஒரு கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இப்போதனை பற்றிய பதினான்கு அம்சங்களில் பூரணமான உடன்பாடிருந்தது. பதினைந்தாவது அம்சத்தில் அவர்களுக்கு தீவிரமான கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ரோமன் கத்தோலிக்க மதம் போதித்த திருவிருந்து பற்றிய போதனையை அவர்கள் அனைவருமே வேதத்திற்கு எதிரானது என்று எதிர்த்தார்கள். ஆனால், மார்டின் லூதர், கிறிஸ்துவின் சரீரம் அப்பத்திலும், திராட்சை இரசத்திலும் இருப்பதாகவும், இயேசுவின் வார்த்தைகளான இது “என்னுடைய சரீரம்” என்பதை நாம் எழுத்துபூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கினார். சுவிஸ் சீர்திருத்த இயையிலறிஞரான சுவிங்லியோ அப்பமும், திராட்சை இரசமும் கிறிஸ்துவின் சிலுவைப் பலியை நினைவுகூர்வதற்கு மட்டுமே நமக்கு உதவுகின்றன என்றும், அவற்றை விசுவாசத்தினால் விசுவாசிகள் புசித்து பெலப்படுகிறார்கள் என்றும் விளக்கினார். மார்டின் லூதர் தன்னுடைய கொள்கையில் இருந்து மீறமாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்தார். இது அவர்கள் மத்தியில் கருத்து வேறுபாட்டை மட்டுமல்லாமல் மனவேறுபாட்டையும் ஏற்படுத்தியது.