கேள்வி 102: விசுவாசிகளின் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கலாமா?
பதில்: விசுவாசிகளின் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில், பரிசுத்த வேதாகமத்தில் அதற்கான எந்தக் கட்டளையோ, உதாரணங்களோ அல்லது உள்ளடக்கமான போதனைகளோ கொடுக்கப்படவில்லை.
(உபாகமம் 12:32; நீதிமொழிகள் 30:6; அப்போஸ். 8:12; 10:47-48).
குழந்தை ஞானஸ்நானம் (திருமுழுக்கு) என்பது என்ன?
விசுவாசிகளின் குழந்தைகளுக்கு தலையில் தண்ணீர் தெளித்துக் கொடுக்கப்படும் ஞானஸ்நானமே அது. இதன் மூலம் விசுவாசிகளின் குழந்தைகள் விசுவாசிகளைப் போலவே திருச்சபையின் அங்கமாக இணைத்துக் கொள் ளப்படுகிறார்கள்.
இந்த நடைமுறை எங்கிருந்து வந்தது? இதைப் பின்பற்றுபவர்கள் யார்?
ஆதித் திருச்சபையில் இந்த நடைமுறை இருக்கவில்லை. இயேசு கிறிஸ்துவும், அவருடைய அப்போஸ்தலர்களும் இத்தகைய நடைமுறைக்கான போதனைகளை அளிக்கவில்லை. அவர்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததாக நாம் வேதத்தில் எங்குமே வாசிப்பதில்லை. இதை நாம் ரோமன் கத்தோலிக்க மதத்தில் பார்க்கிறோம். அம்மதம், தேவநீதியை ஞானஸ்நானத்தின் மூலம் மனிதனுக்குள் புகுத்தி அவனை தேவனுடைய பிள்ளையாக்கக் கூடிய கிருபையைத் தான் கொண்டிருக்கிறது என்று தவறாகப் போதிக்கிறது. அந்த அடிப்படையில் அவர்கள் கத்தோலிக்கருடைய குழந்தைகளுக்கு குழந்தை ஞானஸ்நானத்தை வழங்கி சபையில் இணைத்துக் கொள்கிறார்கள்.