சுவிட்ஸர்லாந்தில் சீர்திருத்தம்
அல்ரிக் சுவிங்லி (Ulrich Swingli)
சீர்திருத்தவாதம் நெருப்புப் போல் ஐரோப்பாவில் பரவியபோது லூதரின் போதனைகள் ஜெர்மனியில் இருந்து டென்மார்க், நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் பரவி இறுதியில் அந்நாடுகளின் உத்தியோகபூர்வமான மதம் என்ற இடத்தையும் பிடித்தது. ஆனால், இதேவேளையில் சுவிட்ஸர்லாந்தில் இன்னொரு வகையான புரொட்டஸ்தாந்து பிரிவு உருவாகியது. ஜெர்மனியில் ஏற்பட்டதுபோன்ற புரட்சிகரமான நிகழ்ச்சிகள் எதுவும் சுவிட்ஸர்லாந்தில் நிகழாவிட்டாலும் இங்கு உருவான சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது. லூதரனிசத்தில் காணப்பட்டது போன்ற பாரம்பரிய விசுவாசம் சுவிட்ஸர்லாந்து சீர்திருத்தப் பிரிவில் காணப்படவில்லை. “வேதம் மட்டுமே சர்வ அதிகாரம் கொண்டது” என்ற உயர்ந்த நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டெழுந்த இப்பிரிவு படங்கள், சிலைகள், விசேஷ அம்சங்கள், யாத்திரை போகுதல் போன்ற அத்தனையையும் ஒட்டுமொத்தமாக ஆராதனையில் இருந்து விலக்கி வைத்தது. பொது ஆராதனையில் ஆர்கன் (Organ) வாசிப்பதையும் விட்டெறிந்தது. இந்தவகையில் சுவிட்ஸர்லாந்தில் உருவான சீர்திருத்தவாதம் ஜெர்மனியில் ஆரம்பித்ததைவிட மிகவும் புரட்சிகரமாக இருந்தது. இந்த சீர்திருத்தவாத பிரிவு மிக இலகுவாக பிரான்சு, ஸ்கொட்லாந்து, ஹங்கேரி, ஒல்லாந்து மட்டுமல்லாமல் ஜெர்மனியின் பெரும்பகுதிக்கும் பரவியது.