நமக்கெப்போது விமோசனம்?

தமிழினத்தில் இன்றைக்கு கிறிஸ்தவ ஊழியமும், திருச்சபை ஊழியமும், தரமற்றுக் காணப்படுவதற்கு தகுதியற்றவர்கள் ஊழியத்துக் குள் நுழைவதே பெருங்காரணம். எங்கு பார்த்தாலும் ஊழியம் செய்பவர்கள் நிறைந்து வழிந்தாலும் இருக்க வேண்டிய வேதத் தகுதிகள் இல்லாதவர்கள்தான் நம்மத்தியில் அதிகம். ஊழியத்துக்கு வருபவர்களை ஆராய்ந்து பார்த்து அங்கீகரிக்க கர்த்தர் ஏற்படுத்திய திருச்சபை தமிழினத்தில் வேத அடிப்படையில் இன்றும் ஒரு சிலவே காணப்படுகின்றன. ஸ்தாபனங்களும், தனிநபர் ஊழியங்களும், குடும்ப ஊழியங்களுந்தான் பல்கிப் பெருகி இருக்கின்றன. இந்த நிலையால் கிறிஸ்தவம் நம் நாட்டில் வேத அடிப்படையில் அமைந்து தலைதூக்கி நிற்க முடியாமல் மதிப்பிழந்து காணப்படுகின்றது. இது தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் நாம் காண்கின்ற நிலை.

கவலைக்குரிய இந்த நிலைமையால் சுவிசேஷம் வல்லமையோடு பிரசங்கிப்பட முடியாத நிலை உருவாகியிருக்கிறது. சுவிசேஷம் வல்லமையோடு பிரசங்கிக்கப்படாவிட்டால் ஆத்துமாக்கள் இரட்சிப்படைய வழி இல்லை. போலித்தனமான செயல்களால் ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பு வழங்கும் மனுஷத்தனமான செயல்களைத்தான் இன்று அன்றாடம் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் சத்தியத்தை சத்தியமாகப் பிரசங்கிக்கும் தகுதியுள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நிலையும் உள்ளது. இதனால் வேதவசனப்பஞ்சம் ஏற்பட்டு சத்தியத்தைக் கேட்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் ஆத்துமாக்களில் ஆத்தும ஈடேற்றத்துக்கு வழியில்லாத நிலைமையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. என்னுடைய ஊழியப் பயணங்களில் எங்கு போனாலும் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது, இந்தியர்கள், கீழைத்தேய நாட்டவர்கள் மத்தியில் இன்றைக்குக் காணப்படும் நிலை இதுதான். கத்தோலிக்கத்துக்கும், கிறிஸ்தவத்துக்கும் இருக்கும் வேறுபாடுகூடத் தெரியாத நிலையிலும், திருச்சபை சீர்திருத்த வரலாறு பற்றி ஒன்றும் தெரியாத நிலையிலும் பல நூற்றாண்டுகள் பின்தங்கிய நிலையில் கீழைத்தேய கிறிஸ்தவத்தின் நிலைமை இன்று இருக்கின்றது.

Continue reading