பிரான்ஸின் ஹியூகனோக்கள்
பதினாறாம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்தில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளான பிரான்ஸ், நெதர்லாந்து, ஹங்கேரி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் திருச்சபை சீர்திருத்தம் தீ போலப் பரவ ஆரம்பித்தது. பிரான்சில் ஏற்பட்ட திருச்சபை சீர்திருத்தம் அதை ஆண்ட அரசர்களோடு தொடர் புடையதாக அமைந்திருந்தது. இந்தக் காலப்பகுதியில் பிரான்சின் மன்னனாக இருந்தவன் முதலாம் பிரான்சிஸ். ஆரம்பத்தில் திருச்சபை சீர்திருத்தத்தில் பிரான்சிஸ் அதிக அக்கறைகாட்டவில்லை. கத்தோலிக்க மதத்தோடு சீர்திருத்தவாதிகளுக்கு இருந்த அறிவு சார்ந்த போராட்டமாக மட்டுமே அதைக் கருதினான் அரசன். அவனுக்கு ஆத்மீக ஈடுபாடோ அதில் எந்த விதமான அக்கறையோ இருக்கவில்லை. 1516ல் அரசன் அரசியல் காரணங்களுக்காக போப்போடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டான். வெகு சீக்கிரத்திலேயே மார்டின் லூத்தருடைய போதனைகளிலும், கல்வினுடைய போதனைகளிலும் அதிக அக்கறைகாட்டிய பிரான்ஸ் தேசத்தவர்கள் தங்களை ஆபத்து நெருங்கி வருவதை உணர்ந்தனர். சீர்திருத்தவாதிகளுக்கும் அரசனுக்கும் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காகவே பிரான்ஸைச் சேர்ந்த ஜோண் கல்வின் தன்னுடைய நூலை பிரான்ஸின் அரசனுக்கு அர்ப்பணித்திருந்தார். ஆனால், லூத்தருடைய போதனைகளை நாட்டில் அநேகர் ஆர்வத்துடன் பின்பற்ற ஆரம்பிக்க பிரான்சிஸ் ஆத்திரங்கொண்டு அவர்களை உயிரோடு கொளுத்த ஆரம்பித்தான். 1545ல் ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டதோடு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இருபத்திரெண்டு நகரங்களும் கிராமங்களும் அடியோடு அழிக்கப்பட்டன.