இயேசு கிறிஸ்து திருச்சபையை உருவாக்க இந்த உலகத்துக்கு வந்தார். அதற்காகவே ஆரம்பத்தில் எழுபது பேரையும் பின்னால் பன்னிருவரையும் தயார் செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுப்பினார் (மத்தேயு 28). அவர்களை அடித்தளமாகக் கொண்டு பெந்தகொஸ்தே நாளில் திருச்சபை இந்த உலகத்தில் ஓர் அமைப்பாக நிறுவப்பட்டது (அப்போஸ். 2). இயேசு கிறிஸ்து மறுபடியும் இந்த உலகத்தை நியாயந்தீர்க்க வருகிறபோது தன்னுடைய சபையைத் தன்னோடு அழைத்துச் செல்லப்போகிறார். அந்த நாள் மட்டும் தொடர்ந்து அவர் தன்னுடைய சபைக்குத் தேவையான வரங்களை அளித்து (எபேசியர் 4), அதைப் பராமரித்து போஷித்துக் காத்து (எபேசியர் 5) வருவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவைப் பொறுத்தவரை திருச்சபை ஒரு சாதாரண அமைப்பல்ல; அது அவருடைய மணவாட்டி. அவரைவிட அதன் மேல் அக்கறை கொண்டவர்கள் இருக்க முடியாது. பிதாவின் வலது பாகத்தில் வீற்றிருந்து ஆட்சி செய்யும் ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருச்சபையின் நலன்களே இலக்காக இருந்து வருகின்றன. திருச்சபை மேல் அவருக்கு அத்தனை அக்கறை இருப்பதால் தான் திருச்சபைப் பற்றிய போதனைகள் புதிய ஏற்பாடு முழுவதும் நிரம்பி வழிகின்றன. தன்னுடைய திருச்சபை இந்த உலகத்தில் தனக்கு சாட்சியாக, தனக்கு மகிமையளிப்பதாக உலகெங்கும், நாடெங்கும், நகரங்கள் தோறும் நிறுவப்பட்டு வளர்ந்து வரவேண்டுமென்பதே இயேசு கிறிஸ்துவின் எதிர்பார்ப்பு.