சில பாப்திஸ்து போதகர்கள் தங்களிடம் ஆசீர்வாதத்திற்காக வருகிறவர்களுக்கு நெற்றியில் சிலுவைக் குறியிடுவதை நான் பார்த்திருக்கிறேன். பிறந்த நாளிலும், திருமண வைபவத்திலும், வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் ஆத்துமாக்களின் நெற்றியில் விரலை வைத்து சிலுவைக்குறியிடுவதோடு தாலியையும் தொட்டு அதிலும் சிலுவைக் குறியிடுவார்கள் இந்தப் போதகர்கள். எல்லா பாப்திஸ்து போதகர்களும் இப்படிச் செய்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டு இடங்களில் இதை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். இந்த முறை சரியா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியாது.
சிலுவைக்கு மதிப்புக் கொடுத்து அதில் ஏதோவொரு தெய்வீகம் இருப்பதுபோல் எண்ணி அதைத் தோளில் சுமப்பது, சபையில் வைத்து வணங்குவது, கைகளில் துணியால் சுற்றி வைத்திருப்பது, தலையனைக் கடியில் வைத்துக் கொண்டுபடுப்பது, அதைக் கையில் வைத்து மற்றவர்களை ஆசீர்வதிப்பது போன்ற செயல்களை ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் செய்து வருகிறார்கள். ரோமன் கத்தோலிக்க மதம் என்றோ வேதத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சாத்தானின் ஊழியக் காரனாக மாறி முற்றிலும் கிறிஸ்துவுக்கு எதிரான ஒரு மதமாக இன்றைக்கு உலகில் இருந்து வருகிறது. யாரோ ஏற்படுத்தி வைத்த ஒரு பாரம்பரியச் செயலாக சிலுவைக்கு தேவையில்லாத தெய்வீகத்தை சூட்டி அதைப் பரிசுத்தமான ஒரு பொருளாக நினைத்து பயபக்தியோடு அதை வணங்கி வருகிறது. கத்தோலிக்க மதத்தில் இருந்து இந்த முறை ஆங்கிலிக்கன், மெத்தடிஸ்ட் சபைகளுக்கும் பரவியிருப்பதும் நாமறிந்த உண்மை. இந்த சபைப்பிரிவுகளும் வேதபூர்வமாக நடப்பதை என்றோ தள்ளி வைத்து விட்டன. எனவே, சிலுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடக்கும் வழக்கம் ரோமன் கத்தோலிக்க மதத்தில் இருந்து வந்த ஒரு முறையென்பது தெளிவாகத் தெரிகின்ற உண்மை.