கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 104: திருவிருந்து (கர்த்தருடைய பந்தி) என்றால் என்ன?

பதில்: புதிய உடன்படிக்கையின் திருநியமங்களில் ஒன்று திருவிருந்து. கிறிஸ்து ஏற்படுத்தியபடி அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் அளிப்பதன் மூலமும், அவற்றில் பங்குகொள்வதன் மூலமும் கிறிஸ்துவின் மரணம் திருவிருந்தில் எடுத்துக்காட்டப்படுகிறது. தகுதியோடு அதில் பங்குபெறுகிறவர்கள் சரீரப் பிரகாரமாகவோ, மாம்சப்பிரகாரமாகவோ அல்லாமல் விசுவாசத்தினால் கிறிஸ்துவின் சரீரத்திலும், திரு இரத்தத்திலும், அவருடைய சகல பலாபலன்களிலும் பங்காளர்களாகி ஆத்மீக போஷாக்கடைந்து கிருபையிலும் வளர்கிறார்கள்.

(1 கொரி. 11:23-26; 1 கொரி. 10:16).

கேள்வி 105: தகுதியோடு திருவிருந்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமானவை யாவை?

பதில்: திருவிருந்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்கள் அபாத்திரமாய் திருவிருந்தில் பங்குகொண்டு ஆக்கினைத்தீர்ப்பை அடையாதபடிக்கு, கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறிந்துகொள்ளுகிறோமா என்று தங்களுடைய அறிவையும், திருவிருந்தைப் புசிக்கும்படியாக தங்களுடைய விசுவாசத்தையும், தங்களுடைய மனந்திரும்புதலையும், அன்பையும் சோதித்துப் பார்த்து புதிய கீழ்ப்படிதலோடு திருவிருந்தில் பங்குகொள்ள வேண்டும்.

(1 கொரி. 11:28-29; 2 கொரி. 13:5; 1 கொரி. 11:31; 1 கொரி. 11:16-17; 1 கொரி. 5:7-8).

விளக்கக்குறிப்பு: கர்த்தரின் வேதம் புதிய ஏற்பாட்டின் நான்கு பகுதிகளில் திருவிருந்தைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறது. மத்தேயு 26:26-29; மாற்கு 14:22-25; லூக்கா 22:17-20; 1 கொரி. 11:23-26. இந்நான்கு பகுதிகளிலும் திருவிருந்து பற்றிய தெளிவான விளக்கங்களைக் கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். இருந்தபோதும் இதுபற்றிய பல தவறான போதனைகளை உருவாக்கி சுவிசேஷத்தைப் பலர் குழப்பப் பார்த்திருக்கிறார்கள். திருவிருந்து பற்றிய இந்த வினாவிடைப் போதனை அத்தகைய தவறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்ற முனைகின்றது.

Continue reading