பொது ஆராதனை பற்றிய ஜே. சி. ரைலின் ஆக்கம் இந்த இதழில் நிறைவுபெற்றிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கர்த்தரின் பணியில் ஈடுபட்டிருந்த ரைல் தன் காலத்தில் தான் ஊழியப்பணி செய்து வந்த இங்கிலாந்து திருச்சபை அமைப்பின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி பொது ஆராதனையில் இருக்க வேண்டிய அம்சங்களை அருமையாக விளக்கிக் காட்டியிருக்கிறார். ரைலின் விளக்கங்கள் அவருடைய சொந்தக் கருத்துக்களல்ல. வேதத்தின் அதிகாரத்தை உணர்ந்திருந்த ரைல் வேதம் ஆராதனை பற்றி தெளிவாக விளக்கும் சத்தியங்களையே விளக்கியிருக்கிறார். அவருடைய காலப்பகுதியில் இன்றைக்கு நாம் சபை வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற பல பிரச்சனைகள் அதே ரூபத்தில் இருக்கவில்லை.
ஆராதனையில் ஆடம்பரம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்துகிற ரைல் அதற்கு உதாரணம் காட்டும்போது ரோமன் கத்தோலிக்க மதப் போதனையின் அடிப்படையில் திருவிருந்து சுவிசேஷ சபைகளில் இருக்கக் கூடாது என்று தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்தகைய தவறுகள் அன்றைக்கு இங்கிலாந்து சபையில் இருந்து வந்திருந்ததால்தான் ரைல் அப்படி எழுத நேர்ந்தது. இன்றைக்கும் அந்தத் தவறுகள் இல்லாமலில்லை. மறுபடியும் கத்தொலிக்க மதத்தின் ஆபத்தான வழிகளில் திருச்சபை போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தால்தான் ரைல் அந்த ஆபத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். இன்றைய காலப்பகுதியில் மேலும் உதாரணங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. முக்கியமாக பொது ஆராதனையில் இசைக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து, ஆடம்பரமான இசைக்கருவிகளை அநேகர் பயன்படுத்தி வருகின்றனர். கர்த்தரைப் புகழ்ந்து பாட வேண்டிய சபையாரின் குரலைக் கேட்க முடியாதபடி இசைக் கருவிகளின் சத்தம் சபைகளில் காதைக் கிழித்து ஆராதனையை அசிங்கப்படுத்தி வருகின்றது. இசைக் கருவி வாசிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். ஆராதனையில் பாடல்கள் மற்றும் சங்கீதப்பாடல்களின் இடம் எது என்றே திருச்சபை இன்று கேட்டுப்பார்ப்பதில்லை. இதைப்பற்றி கர்த்தர் வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று அறிந்துகொள்ளுகிற தாழ்மையையும், மனப்பக்குவத்தையும் பார்க்க முடியாமலிருக்கிறது.