பல வருடங்களுக்கு முன்பு என் நாட்டில் எனக்கு ஒரு தொலை பேசி செய்தி வந்தது. தொடர்பு கொண்டவர் தமிழ் வேதாகமம் ஒன்று வேண்டுமென்றும், சுவிசேஷ செய்தியை விளக்கும் கைப்பிரதி வேண்டும் என்றும் கேட்டார். கேட்டவர் என் நாட்டைச் சேர்ந்த வெள்ளையர் என்பதால் உங்களுக்கு எதற்கு இதெல்லாம் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் ஒரு டாக்டர். சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் மருந்து வாங்க வந்தார். அவர் கர்த்தரை அறியாதவர். அவருக்கு இயேசுவைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவருக்குக் கொடுப்பதற்காகத்தான் கேட்கிறேன் என்று சொன்னார். இந்த டாக்டரையும் எனக்கு முன்பின் தெரியாததால் எப்படி என்னைத் தேடிப்பிடித்தீர்கள் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. அதற்கு அவர் பல இடங்களில் விசாரித்துப் பார்த்து கடைசியில் நண்பரொருவர் உங்களைப் பற்றிச் சொன்னதாகக் கூறினார். என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு யோவான் சுவிசேஷ நூலொன்றையும், கிறிஸ்தவத்தைப் பற்றி நானெழுதிய ஒரு சிறு நூலையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். நான் பயன்படுத்தும் தமிழ் வேதாகமம் மட்டுமே அப்போது என் கையில் இருந்தது. அதனால் அதை அவருக்குக் கொடுக்க முடியவில்லை.
இது நடந்து முடிந்து இரண்டு வாரங்களில் எனக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதை அனுப்பியவர் தன்னைப் பற்றிச் சுருக்கமாக விளக்கியிருந்தார். யாருக்காக நான் யோவான் சுவிசேஷ நூலையும், என்னுடைய நூலையும் அனுப்பியிருந்தேனோ அவரே அந்த இ-மெயிலை எழுதியிருந்தார். தன் பெயர் அவ்வை நடராஜன் என்றும், தான் தஞ்சாவூர் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் என்றும் அறிமுகப்படுத்தியிருந்தார். நான் அனுப்பிவைத்திருந்த நூலைப் பற்றி எழுதியிருந்த அவர், தான் அநேக தமிழ் பட்டதாரிகளுடைய ஆய்வுகளை சரிபார்த்து அவர்கள் டாக்டர் பட்டம் பெறுவதற்கு காரணமாக இருக்கிற பதவியில் இருந்ததாகவும், இதுவரையில் அழகான தமிழில் இனிமையாக என் நூலில் இருக்கும் தமிழ் போல் வாசித்தது குறைவு என்றும் என் தமிழ் நடையைப் பாராட்டி எழுதிவிட்டு, உடனடியாக என்னைப் பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்க முடியும் என்று எழுதிக் கேட்டிருந்தார். அவர் கேட்டுக் கொண்டபடியே அவரை நான் என் ஊரில் சந்திக்க நாளைக் குறித்துக் கொடுத்தேன். சொன்னபடியே அந்த நாளில் நானிருந்த ஊருக்கு வந்து எனக்கு போன் செய்தார். நன்பரொருவருடைய வீட்டில் தங்கியிருந்த அவரை சந்திக்க போனபோது கையில் ஒரு நீல நிற சால்வையோடு வந்து அதை என் கழுத்தில் போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதற்குப் பிறகு அந்த வீட்டு ஹாலில் அமர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் மனம் விட்டு பேசினோம். அவர் முன்னாள் துணை வேந்தர், தமிழ்ப் பேராசிரியர் மட்டுமல்ல மேடைப்பேச்சாளர் என்பதையும் அறிந்துகொண்டேன். தமிழகத்தில் தன்னைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை என்றும் சொன்னார். பேச்சு ஆரம்பத்தில் தமிழையும், தமிழ் இலக்கியத்தையும், தமிழ் எழுத்தாளர்களையும் பற்றியதாக இருந்தது. பின்னால் கிறிஸ்தவத்திற்குத் திரும்பியது. சென்னையில் தான் போகக்கூடிய சபையிருக்கிறதா, வேத சத்தியங்களை யாராவது விளக்கிச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் ஆர்வத்தோடு கேட்டார். சென்னைக்கு வந்தால் நிச்சயம் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார். திருமறைத் தீபத்தை அவருக்கு வாசிக்கும்படி கொடுத்தேன். (அதன்படி சென்னைக்கு போனபோது அவருடைய வீட்டுக்குப் போய் அங்கே அவரும் அவருடைய துணைவியாரும் அன்போடளித்த விருந்துபசாரத்தை பின்னால் அனுபவித்திருக்கிறேன். அப்போதும் அவர் எனக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்ய மறக்கவில்லை!)