விசுவாச அறிக்கையின் சிறப்பையும், அதைப்படிக்க வேண்டிய அவசியத்தையும் பற்றிப் பலதடவைகள் நான் எழுதியிருக்கிறேன். இந்த ஆக்கத்தில் அதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்களைத் தர விரும்புகிறேன். அதற்கு முன்பாக விசுவாச அறிக்கை பற்றிய ஒருசில உண்மைகளை விளக்க வேண்டியது அவசியமாகிறது.
1689 விசுவாச அறிக்கையின் முக்கியத்துவம்
1689 விசுவாச அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பத்து வருடங்களாகிறது. விசுவாச அறிக்கையொன்றை அடிப்படையாகக் கொண்டு, தாம் விசுவாசிக்கும் சத்தியங்களை வெளிப்படையாக வெட்கமோ, பயமோ, தயக்கமோ இல்லாமல் அறிவித்து, திருச்சபை நடத்த விரும்புகிறவர்கள் இதனைத் தங்களுடைய சபையின் விசுவாச அறிக்கையாக ஏற்று, அறிவித்து ஊழியத்தில் ஈடுபடுவார்கள். இப்படிச் செய்வது இன்று நேற்று என்றில்லாமல் ஆதி சபைக்காலத்தில் இருந்தே நடந்து வந்திருக்கின்றது. அப்போஸ்தலர்களின் காலத்துக்குப் பிறகு முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குள்ளேயே சபையைப் போலிப்போதனைகள் கடுமையாகத் தாக்க ஆரம்பித்ததால், சபைகள் தாம் விசுவாசிப்பவற்றைத் தெளிவாக அறிக்கைகள் மூலம் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மூன்றாம் நூற்றாண்டில் ஏரியன் என்பவன் கிறிஸ்துவின் தெய்வீக, மானுடத் தன்மைகள் பற்றி குழப்பமான போதனைகளைத் தந்து ஆத்துமாக்களைத் திசை திருப்ப ஆரம்பித்தான். சபையைக் காப்பாற்றுவதற்காக அன்று சபையில் உதவிக்காரராக இருந்த அத்தனேஸியஸ் ஏரியனுடைய போலிப்போதனையை தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாமல் கிறிஸ்துவின் தெய்வீக, மானுடத் தன்மைகள் பற்றி வேதம் போதிக்கும் உண்மைகள் யாவை என்பதை ஓர் அறிக்கை மூலமாக சுருக்கமாக வெளியிட்டு சபையைக் காப்பாற்றினார். அதற்குப் பிறகு காலத்துக்குக் காலம் இத்தகைய அறிக்கைகளை சபைகள் வெளியிட்டு வந்திருக்கின்றன. இவையெல்லாம் பிசாசின் தாக்குதலில் இருந்து தப்பி, சபை இந்த உலகத்தில் வெற்றி நடைபோட்டு வர அவசியமாக இருந்தன. பிசாசின் இடைவிடாத தாக்குதல்களும், கால மாறுதல்களும் இத்தகைய விசுவாச அறிக்கைகளை அவசியமானதாக்கியிருக்கின்றன. ரோமன் கத்தோலிக்க மதத்தின் அடக்குமுறையும், சத்தியத்திற்கெதிரான விரோதப் போக்கும் உலகறிந்தவை. அம்மதத்தின் அதிகாரம் பதினாறாம் நூற்றாண்டில் முறியடிக்கப்பட்ட பிறகு சபை மறுபடியும் அத்தகைய ஆபத்துக்குள் போய்விடாதபடி இருப்பதற்காக விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் சபைப் பாதுகாப்புக்காகவும், ஆத்துமாக்களின் வேத அறிவு வளர்ச்சிக்காகவும் சீர்திருத்தவாதிகளால் வெளியிடப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் 1689 விசுவாச அறிக்கை. இன்று ரோமன் கத்தோலிக்க மதம் மட்டுமல்லாமல் புதிது புதிதாக எழும்பியிருக்கும் பல்வேறு குழப்பப் போதனைகளையும் சபை சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றின் வசியத்துக்கு சபை ஆளாகி விடாதபடி இருக்க விசுவாச அறிக்கையின் அடிப்படையில் அமைந்த சபை அமைப்பு அவசியமாகிறது. சபை மக்களுக்கு தாம் எதை விசுவாசிக்கிறோம் என்பது தெரியாமலிருப்பதைப் போன்ற ஆபத்து வேறில்லை. அத்தோடு, சபையை வழிநடத்துகிறவர்களும் எதேச்சாதிகாரப் போக்கில் போய்விடாமல் இருக்கவும், தங்களைக் குழப்பப் போதனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் விசுவாச அறிக்கை உதவும். வேதத்திற்கும், தாம் ஏற்றுக்கொண்டிருக்கும் விசுவாச அறிக்கைக்கும் கட்டுப்பட்டு சத்தியத்தின் வழியில் சபை நடத்த இது உதவும்.