இதென்ன இப்படியொரு தலைப்பு என்று நீங்கள் மலைக்கலாம். இந்தத் தலைப்பை நான் கொடுத்ததற்கு காரணமிருக்கிறது. இந்த வார்த்தைகளை, கிறிஸ்தவ இறையியல் கோட்பாட்டைப் பொறுத்தவரையில் பொதுவாகப் அநேகரிடம் இன்று இருந்து வருகின்ற எண்ணங்களை விளக்குவதற்காக நான் பயன்படுத்தியிருக்கிறேன். இதற்கு முந்தைய ஆக்கத்தில் பாவம் எந்தளவுக்கு மனிதனைப் பாதித்து அவனுடைய சித்தத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பதை ஆராய்ந்திருக்கிறோம். பெலேஜியஸ், மூல பாவம் (Original Sin) எனும் கோட்பாட்டை மறுத்து மனிதன் கடவுளுடைய கட்டளையை ஏதேனில் மீறியபோது அந்தச் செயல் வெறும் தவறான நடத்தை மட்டுமே என்றும், அந்த நடத்தை அவனை ஆவிக்குரிய விதத்தில் சீர்குலைக்கவில்லை என்றும் போதித்தார் என்பதைக் கண்டோம். பெலேஜியஸின் போதனைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய போதனைகள் அவருக்குப் பின்னால் வரலாற்றில் உருவாகின. அந்தப் போதனைகள் இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் பொதுவாகவே எல்லா நாடுகளிலும் தொடர்ந்து இருந்துவருகின்றன. இந்தப் போதனைகளின் அடிப்படை அம்சம், மனிதன் இரட்சிப்பை அடைவதில் கடவுளும் மனிதனும் சமமாக இணைந்தே செயல்படுகிறார்கள் என்பதுதான். அதனால் தான் கடவுள் மனிதனைப் பார்த்து ‘நீயும் நானுமா!’ என்று கேட்பதுபோல் தலைப்பைக் கொடுத்திருக்கிறேன்.
மொனர்ஜிசமும் (Monergism), சினர்ஜிசமும் (Synergism)
மேலே நான் குறிப்பிட்ட புதிய போதனைகளின் அடிப்படையான தவறை விளக்கவும், வேத சத்தியங்களைத் தெளிவாக சுட்டிக் காட்டவும் இறையியல் வல்லுனர்கள் தகுந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படியாக இறையியல் போதனைகளை விளக்கக் குறிப்பிட்ட பதங்களைப் பயன்படுத்தும் வழக்கம் எப்போதும் இருந்து வந்திருக்கின்றது. அதில் எந்தத் தவறுமேயில்லை. குறிப்பாக கடவுளில் மூன்று ஆள் தத்துவங்கள் காணப்படுகின்றன என்பதை விளக்குவதற்கு ‘திரித்துவம்’ என்ற பதத்தை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தி வரவில்லையா? இந்தப் பதம் வேதத்தில் காணப்படாதபோதும் இது மிகவும் அவசியமான வார்த்தைப் பிரயோகம். இதேபோல்தான் பெலேஜியஸின் தவறான போதனைகளைத் தழுவி உருவான போதனைகளை வெளிப்படுத்தவும், அவற்றிற்கு மாறான வேதபோதனைகளை சுட்டிக்காட்டவும் வார்த்தைப் பிரயோகங்களை இறையியல் வல்லுனர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த வார்த்தைப் பிரயோகங்கள்தான் மொனர்ஜிசம் (Monergism), சினர்ஜிசம் (Synergism) என்பவை.