“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்ற வரிகளை ஒரு காலத்தில் தமிழகத்தின் ஆஸ்தான கவிஞராக இருந்த கண்ணதாசன் எழுதியிருந்தார். கடவுளை அறியாத மனிதனாக இருந்தபோதும் அவரெழுதிய இந்த வாசகம் உண்மையானதுதான். நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் நாமல்லவா தெய்வம் என்றாகிவிடும். என்ன நோக்கத்தில் கண்ணதாசன் இதை எழுதினாரோ எனக்குத் தெரியாது. கடவுளின் பொதுவான கிருபையின் காரணமாக அவரை முற்றிலும் அறியாத கண்ணதாசன் போன்ற மனிதர்கள்கூட ஞானமான சில விஷயங்களை சொல்லிவிடுகிறார்கள். அதற்காக அவர்கள் கடவுளை அறிந்திருக்கிறார்கள் என்றோ, அவரை நெருங்கி விட்டார்களென்றோ சொல்ல முடியாது. ஆவியில்லாத மனிதர்களில் சொட்டும் ஆவிக்குரிய சிந்தனையோ, நடவடிக்கையோ இருக்க வழியில்லை.
கண்ணதாசனின் இந்த வார்த்தைகள் என் மனதுக்கு வந்ததற்குக் காரணம் உலகத்தில் சமீபத்தில் நடந்திருக்கும் சில காரியங்கள்தான். முதலில் அக்கிரமம் நாளுக்கு நாள் உலகில் அநியாயத்துக்கு அதிகரித்து வருகிறது. கிறிஸ்தவர்களில் சிலர் இந்த உலகம் ஆண்டவருடைய வருகைக்கு முன் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு என்றைக்குமே இல்லாதவகையில் சமாதானத்தையும், பெரும் சுவிசேஷ ஆசீர்வாதத்தையும், எழுப்புதல்களையும், திருச்சபை எழுச்சியையும் அனுபவிக்கும் என்கிறார்கள். அவர்களுடைய இந்த கிறிஸ்துவின் வருகையை மையமாகக் கொண்ட கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களைச் சுற்றிப் பார்க்கின்ற எவருமே இந்த உலகம் இன்னும் கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுவார்கள். அதற்கான அறிகுறிகள் தெளிவாக இருக்கின்றன. இந்த உலகம் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாக வேதம் சொல்லுகிறது. இயேசு மீண்டும் வருகிறபோது இந்த உலகத்தை முற்றிலும் உருமாற்றம் செய்யப்போகிறார் என்கிறது வேதம். அந்த மீட்புக்காகவே இந்த உலகமும் பரிதவிப்போடு காத்திருப்பதாக ரோமர் 8லும் வாசிக்கிறோம்.