பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதி 22:6
4. பிள்ளையின் ஆத்துமாவின் நலனைக் குறிக்கோளாகக் கொண்டே எப்போதும் பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுங்கள்.
உங்களுடைய கண்களுக்கு உங்கள் பிள்ளைகள் விலையேறப் பெற்றவர்கள்தான் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், நீங்கள் உண்மையாகவே அந்தப் பிள்ளைகள்மேல் அன்பு காட்டுவீர்களானால், அவர்களுடைய ஆத்துமாவின் நலனைக் குறித்து அடிக்கடி நினைத்துப் பாருங்கள். அவர்களுடைய நித்தியஜீவனைவிட நீங்கள் அக்கறை செலுத்த வேண்டிய பெரிய விஷயம் எதுவும் இல்லை. அவர்களிடம் இருக்கின்ற அந்த அழியாத ஆத்துமாவைவிட வேறு எந்த அங்கமும் உங்களுக்கு மேலானதாகத் தெரியக்கூடாது. இந்த உலகமும் அதன் எல்லா மகிமையும் ஒரு நாள் அழிந்து போகும். மலைகள் எல்லாம் உருகிவிடும். வானங்கள் புத்தகச்சுருளைப் போல சுருட்டப்பட்டுவிடும். சூரியன் வெளிச்சத்தைக் கொடுக்காமல் போகும் காலம் வரும். எல்லாமே ஒரு நாள் அழிந்து போகப்போகின்றன. ஆனால், நீங்கள் மிகவும் அன்புகாட்டுகிற உங்கள் பிள்ளைகளுடைய ஆத்துமா இவைகள் அனைத்தையும் கடந்து என்றென்றும் வாழப் போகின்றது. அதனால் அவர்களுடைய சந்தோஷமும், துக்கமும் உங்கள் கையிலேயே இருக்கிறது.
இந்த எண்ணமே உங்களுடைய மனதில் முக்கிய இடத்தைப் பிடித்து ஆக்கிரமித்திருக்க வேண்டும். இந்த எண்ணத்தைக் கொண்டவர்களாகத்தான் நீங்கள் பிள்ளைகளுக்கு எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். நீங்கள் அவர்களுக்காக செய்கிற காரியம் எதுவாக இருந்தாலும், என்ன திட்டம் வகுத்தாலும் “இந்தக் காரியம் என் பிள்ளையினுடைய ஆத்துமாவைப் பாதிக்குமா?” என்ற கேள்வியைக் கேட்க மறக்காதீர்கள்.