சமீபத்தில் நான் Breaking India என்ற நூலை ஆங்கிலத்தில் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அது தமிழிலும் ‘உடையும் இந்தியா?’ என்ற தலைப்பில் கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ் நூலை நான் முதலில் வாங்கியபோதும் அது ஆங்கில மொழிபெயர்ப்பு வாடை அடிக்க ஆரம்பித்ததால் ஆங்கில நூலை ஐபேட்டில் இறக்கி வாசித்தேன். இதை எழுதியிருப்பவர்கள் ராஜீவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும். ராஜீவ் மல்கோத்திரா ஓர் இந்திய அமெரிக்கர். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பிரின்ஸ்டன் என்ற நகரில் அழகான வீட்டில் வசதியோடு வாழ்ந்து வருகிறார். அவர் பெரும் பணக்காரர். ‘இன்பினிடி’ என்ற பெயரில் ஒரு பவுன்டேஷனை அமைத்து அதன் மூலம் இந்திய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுகள் செய்து நூல்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நூலைப் பற்றி முதலில் கருத்துத் தெரிவிக்கலாமா, கூடாதா என்ற சிந்தனை எனக்கிருந்தது. கருத்துத் தெரிவிப்பதால் என்ன பயன் கிட்டும் என்று நான் சிந்திக்காமலில்லை. இதைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் விட்டிருக்க முடியும். கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம் உலகம் தெரியாமல் இருந்துவிடக் கூடாது. இது நம்மைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்ற நூல், அதுவும் இந்துத்துவ கண்ணோட்டத்தில் ஒருவித காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்டிருக்கின்ற நூல். அந்த வெறுப்புக்கும், கோபத்துக்கும், கிறிஸ்தவம் இவர்களுக்குப் பிடிக்காமல் போவதற்கும் என்ன காரணம் என்பதை நாம் தெரிந்துகொள்ளாமல் இருப்பது தவறு. நம்மில் தவறு இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளுவதும், நம்மைத் திருத்திக் கொள்ளுவதுந்தான் கிறிஸ்தவர்களுக்கு அழகு. அதனால்தான் உங்களுக்கும் பயன்படட்டும் என்று இதை எழுதவும், வெளியிடவும் தீர்மானித்தேன்.