இதற்கு முன்பு வந்திருந்த ஓரிதழில் இதே தலைப்பில் மனிதனுடைய சித்தத்தின் தன்மையை (The Will of Man) ஆராயும் ஆக்கங்களின் ஒருபகுதியை வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் பகுதியாக இந்த ஆக்கம் வெளிவருகிறது. இதுவரை, மூல பாவத்தைப் பற்றிய பெலேஜியனின் கோட்பாடுகளில் இருந்து ஜெக்கபஸ் ஆர்மீனியஸின் கோட்பாடுகள்வரை பார்த்திருக்கிறோம். இந்த இதழில் தொடர்ந்து 18ம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்வரும் நூற்றாண்டுகளிலும் இது பற்றிக் காணப்பட்ட கோட்பாடுகளை ஆராய்வது அவசியமாகிறது.
ஜொனத்தன் எட்வர்ட்ஸும் (Jonathan Edwards) மனித சித்தமும்
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய பிரசங்கியும், இறையியல் வல்லுனரும், சிந்தனையாளருமாக இருந்தவர் ஜொனத்தன் எட்வர்ட்ஸ். அமெரிக்காவில் வாழ்ந்த எட்வர்ட்ஸுக்கு அக்காலத்தில் ஏற்பட்ட ஆத்மீக எழுப்புதலோடு தொடர்பிருந்தது. எட்வர்ட்ஸின் பல நூல்கள் பிரபலமானவை. அவருடைய ‘கோபத்தோடிருக்கும் கடவுளின் பார்வையில் பாவிகள்’ என்ற பிரசங்கம் மிக முக்கியமானதும் பிரபலமானதுமாகும். பக்திரீதியான உணர்வுகள் (1746), சித்தத்தின் சுயாதீனம் (1754) ஆகிய முக்கிய நூல்களையும் அவர் எழுதியுள்ளார். எட்வர்ட்ஸ் மூல பாவத்தைப் பற்றி ஓர் ஆக்கத்தில் விளக்கியுள்ளார். இந்த முக்கியமான ஆக்கம் பெருமளவுக்கு அநேகர் அறிந்திராத ஒன்று.