[இந்த ஆக்கத்தை வாசிக்கும்போது ஓரிரு தடவைகள் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை வாசித்தபின்போ அல்லது அதைத் திறந்துவைத்துக்கொண்டு இந்த ஆக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்து வாசிப்பது பிரயோஜனமாக இருக்கும். – ஆசிரியர்]
அப்போஸ்தலருடைய நடபடிகள் இரண்டாம் அதிகாரத்தை வாசித்துப் பார்க்கின்றபோது நமக்கு என்ன தோன்றுகிறது? இதுவரை இருந்திராத வகையில் அப்போஸ்தலனான பேதுரு பெருந்தைரியத்தோடு சகல அப்போஸ்தலர்களும் சூழ்ந்திருக்க முன்னால் வந்து அங்கிருந்த திரளான யூதக்கூட்டத்தைப் பார்த்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஆணித்தரமாக விளக்கினார். அந்த சுவிசேஷ செய்தியில் கிறிஸ்துவின் மீட்பின் செயலை பழைய ஏற்பாட்டின் அடிப்படையில் அருமையாக விளக்கியது மட்டுமல்ல, ஆவிக்குரிய தைரியத்தோடு பேதுரு பிரசங்கித்திருப்பது நாம் ஒரு தடவை வாசிப்பதை நிறுத்திக் கவனிக்க வேண்டிய பெருநிகழ்ச்சி. அத்தோடு, அந்தப் பிரசங்கத்தின் முடிவில், இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக அநேகர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று பெருங்குரலெடுத்துக் கேட்டதையும் கவனிக்கிறோம். அன்றைய தினத்தில் உடனடியாக மூவாயிரம் பேர் விசுவாசிகளாகி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் கவனிக்கிறோம். இந்த இடத்தில் நாம் சில முக்கியமான உண்மைகளைக் கவனித்துப் பார்க்காமல் இருக்க முடியாது.