கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்தவத்தை விமர்சனம் செய்து வருவது என்றுமே இருந்திருந்தாலும் சமீப காலத்தில் இணையத்தில் அது அதிகரித்திருக்கிறது. இதிலும் சில வகையறாக்கள் இருக்கின்றன. காழ்ப்புணர்ச்சியோடும், சந்தேகக் கண்களோடும் பார்த்து விமர்சனம் செய்கின்ற இந்துத்துவ ராஜீவ் மல்கோத்திரா போன்றோர் ஒருவகை. இன்னொரு வகையினர் கிறிஸ்தவத்தை மதித்து, அதேநேரம் அதைப் புரிந்துகொள்ளும் முயற்சியோடு அது பற்றிக் கருத்துத் தெரிவிப்பவர்கள். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவருக்கு கிறிஸ்தவ நண்பர்களும் இருக்கிறார்கள். ஜெயமோகன் மார்க்ஸிய பார்வைகொண்ட இந்து. தமிழகத்தில் முக்கியமான எழுத்தாளர். தன்னுடைய வலைத்தளத்தில் அவரெழுதிய ‘விவிலியம், புதுமொழியாக்கம்’ ஆக்கத்தை சமீபத்தில் நான் வாசிக்க நேர்ந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது, கிறிஸ்தவர்களே இதுவரை சிந்தித்துப் பார்க்காத ஒரு விஷயத்தை கிறிஸ்தவரல்லாத ஒருவர் இந்தளவுக்கு கருத்தோடு சிந்தித்து அதுபற்றி எழுதியிருப்பதைப் பார்த்தபோது.
ஜெயமோகனின் ஆக்கம் 1995ல் வெளிவந்த பொது மொழிபெயர்ப்பான ‘திருவிவிலியம்’ என்ற தமிழ் மொழிபெயர்ப்பைப் பற்றிக் கருத்துத் தெரிவித்து எழுதப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பை தமிழக கத்தோலிக்க நடுநிலையமும், அனைத்துலக வேதாகம சங்கமும் மதுரையில் வெளியிட்டன. இந்திய வேதாகம சங்கப் பதிப்பான இதன் பிரதி ஒன்றை சீ. எஸ். ஐ. திருச்சபை போதக நண்பர் ஒருவர் 2002ல் என்னிடம் தந்து வாசித்து கருத்துத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தார். அன்று பல வேலைப்பளுவின் காரணமாக அதை நான் உடனடியாக செய்யமுடியவில்லை. ஜெயமோகனின் ஆக்கத்தை வாசித்தபிறகு அதை மறுபடியும் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அதன் விளைவுதான் இந்த ஆக்கம்.