சமீபத்தில் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு முக்கிய தமிழ் எழுத்தாளர் தந்திருந்த விளக்கத்தை வாசிக்க நேர்ந்தது. ‘ஒழுக்கம் என்பது ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொன்றாக உள்ளன. அவை உருவாவதற்கான சமூகப்பின்னணியும் வாழ்க்கைச் சூழலும் பல்வேறுபட்டவை. அவை சமூகத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேரூன்றச் செய்யப்படுகின்றன. அந்த சமூகப் பின்னணியும் சூழலும் மாறிய பின்னரும் அவை அவ்வளவு எளிதாக மாறுவதில்லை. இதுவே ஒழுக்கஞ்சார்ந்த விஷயங்களில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை’ என்று அவர் விளக்கமளித்திருந்தார். இந்த விளக்கம் ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் மனந்திறந்து கேட்டிருந்த வினாவுக்கு அவர் தந்திருந்த விளக்கத்தின் ஒருபகுதி. விளக்கம் தந்த எழுத்தாளர் ஒழுக்கமென்பது சமூகத்தால் உருவாக்கப்படுகிறதென்றும், அது காலத்துக்குக் காலம் மாறுகிறதென்றும், காலப்போக்குக்குத் தக்கதாக அது மாறாவிட்டால்தான் பிரச்சனை என்றும் ஆதங்கப்படுகிறார். இந்த எழுத்தாளரைப் பொறுத்தவரையில் ஒழுக்கமும், பண்பாடும் ஒன்றே. வீட்டுக்குள் போவதற்கு முன் செருப்பைக் கழட்டி வாசலில் வைத்துவிட்டுப் போவதற்கும் (பண்பாடு) ஓரினச்சேர்க்கையையும் (ஒழுக்கம்) அவர் ஒன்றாகத்தான் பார்க்கிறார். இதை வாசித்தபோது எந்தளவுக்கு தமிழ் சமுதாயத்தின் சிந்தனைப்போக்கில் ஒழுக்கத்தைக் குறித்த தீவிர மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை என்னால் ஆழமாக எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.
நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு புரட்சிகரமாக எழுதிப் பிரபலமாக ஆரம்பித்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். ஆண், பெண் உறவு, திருமணம் பற்றிய அவருடைய சுதந்திரமான, சமுதாயம் வாசித்துப் பழகாத எண்ணங்களை அவர் தன் சிறுகதைகளிலும், நாவல்களிலும் வெளியிட ஆரம்பித்தபோது சமுதாயம் அவரைப் பார்த்துச் சீறியது. முக்கிய பத்திரிகையொன்று அந்தச் சீற்றம் தாங்கமுடியாமல் தான் வெளியிட்ட அவருடைய கதைக்காக பொதுமன்னிப்புக் கேட்டது. அன்று சமுதாயம் பொதுவாக ஒழுக்கத்தைப் பற்றிய வலுவான எண்ணப்பாட்டைக் கொண்டிருந்தது மட்டுமல்ல அதைப் பாதுகாக்கவும், அதற்காகப் போராடவும் தவறவில்லை.