இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மூன்று சிறு நூல்களை நாம் தமிழில் வெளியிட்டோம். இவை ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பிரசங்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்த மூன்றைப் பற்றியும் நான் எழுதுவதற்குக் காரணம் இவை சுவிசேஷ பிரசங்கங்கள் என்பதால்தான். சுவிசேஷ பிரசங்கங்கள் விசேஷமானவை. எந்தளவுக்கு விசேஷமானவை என்பதை நம்மினத்தில் பெரும்பாலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஏனைய பிரசங்கங்களைவிட சுவிசேஷ பிரசங்கங்கள் கவனத்தோடு தயாரிக்கப்பட வேண்டியவை. அதற்குக் காரணம் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட கால அளவில் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை சிந்திக்க வைத்து, அவர்களுடைய இதயத்தைத் தொட்டு இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணரும்படிச் செய்யவேண்டிய கடமை பிரசங்கிக்கிறவருக்கு இருக்கிறது. இத்தனையையும் அந்தக் குறுகிய கால அளவில் செய்யவேண்டுமானால் பிரசங்கத்தைத் தயாரிப்பதில் பெருங்கவனம் எடுக்க வேண்டியது அவசியம்.
பிரசங்கத்தைத் தெளிவாகத் தயாரிப்பதில் மட்டுமல்லாமல், கேட்டுக் கொண்டிருப்பவர்களின் எண்ணப்போக்கு, மனநிலை, அவர்களுடைய வாழ்க்கை நிலை, தேவைகள், படித்தவர்களா, படிக்காதவர்களா என்பது போன்ற அத்தனையையும் மனத்தில் வைத்துப் பிரசங்கத்தைத் தயாரிக்க வேண்டும். பின்பு தயாரித்த பிரசங்கத்தைக் கேட்பவர்கள் இலகுவாக புரிந்துகொள்ள வேண்டிய மொழியில், சிற்றோடை துள்ளித் தவன்று தடையின்றி ஒடுவதுபோல் பிரசங்கிக்க வேண்டிய கடமையும் இருக்கிறது. பிரசங்கத்தின் முடிவில், ‘இவர் சொல்லுவது உண்மைதான், இயேசு அவசியம் தேவைதான்’ என்றளவுக்கு கேட்பவர்களை சிந்திக்க வைக்கின்ற விதத்தில் பிரசங்கம் இருக்க வேண்டும். அவர்கள் இயேசுவிடம் வருவதும் வராததும் கர்த்தரின் கையில் தங்கியிருக்கிறது. அது நம்முடைய வேலையல்ல. இருந்தாலும் கேட்பவர்களின் இருதயத்தைத் துளைத்து பாவத்தைப் பற்றியும், அதிலிருந்து இயேசுவின் மூலமாக விடுதலை அடைய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் மனித அளவில் அவர்களை சிந்திக்க வைத்து ஒருமுடிவுக்கு வரும்படிச் செய்ய வைக்கும் வகையில் சுவிசேஷ பிரசங்கம் அமைந்திருக்க வேண்டும். அந்தப் பணி பிரசங்கியினுடையது. அதனால் தான் சுவிசேஷப் பிரசங்கத்தைத் தயாரிப்பதில் பிரசங்கி விசேஷ கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.