‘ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ (ஆதி 1:1)
ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தின் முதல் வசனம் மிகவும் முக்கியமானது. அது வேதத்தின் முதல் வசனம் என்பதனால் மட்டும் அல்ல; அது முழு வேதத்திற்குமான அத்திவாரத்தை அமைத்துத் தரும் வசனமாகவும் இருக்கிறது. இந்த வசனம் இதற்குப் பிறகு வரும் வசனப்பகுதியோடு பிரிக்கமுடியாத தொடர்புகொண்டது. கிறிஸ்தவ இவெஞ்சலிக்கள் சமுதாயத்தில் அநேகர் இன்றைக்கு இந்த வசனம் பற்றிய மிகத் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இந்த வசனத்திற்கும் இதற்கு அடுத்த வசனத்திற்கும் இடையில் (1:1-1:2) கோடிக்கணக்கான ஆண்டுகள் கொண்ட இடைவெளி இருந்ததாகவும், அந்த இடைவெளிக்காலத்தில் அநேக நிகழ்ச்சிகள் நடந்ததாகவும் நம்புகின்றனர். இந்தத் தவறான நம்பிக்கைக்கு ‘இடைவெளித் தத்துவம்’ (Gap Theory) என்று பெயர். இந்த இடைவெளித் தத்துவத்தின்படியான இடைவெளிக்காலத்தைப் பற்றி, இதை நம்புகிற எல்லோருமே ஒரே விளக்கத்தைத் தருவதில்லை. கோடிக்கணக்கான இடைவெளிக் காலம் இருந்ததாக பெரும்பாலானோர் நம்பியபோதும், பல்லாயிரக்கணக்கான இடைவெளிக்காலம் மட்டுமே இருந்ததாக நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். இந்த இடைவெளிக்காலத் தத்துவம் பொதுவாகவே இன்றைக்கு இவெஞ்சலிக்கள் சமுதாயத்தில் பரவலாக இருந்துவருகிறது. அநாவசியத்துக்கு கீழைத்தேய இறையியல் கல்லூரிகள் பெரும்பாலானவற்றிலும் நுழைந்து குடிகொண்டிருக்கிறது. இந்த இடைவெளிக்காலப்பகுதியில் ஆதாமுக்கு முன் இன்னொரு மனிதன் இருந்ததாகவும், சாத்தானின் வீழ்ச்சியும் இந்தக் காலப்பகுதியில்தான் நிகழ்ந்ததாகவும் கட்டுக்கதைகள் பல எழுந்துள்ளன.