தொமஸ் வொட்சன் (1620-1686) இங்கிலாந்தில் பிறந்தவர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் இருந்த இம்மானுவேல் கல்லூரியில் ஆழமாகக் கல்வி பயின்று பட்டம் பெற்றவர். படிப்பை முடித்தபின் அவர் பியூரிட்டன் குடும்பமொன்றில் கொஞ்சக்காலம் வாழ்ந்து வந்தார். 1647ல் பியூரிட்டன் போதனைகளில் நம்பிக்கை வைத்திருந்த போதகர் ஒருவரின் மகளான அபிகேல் பீடில் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அடுத்து வந்த பதின்மூன்று வருடங்களில் அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன; அவற்றில் நான்கை அவர்கள் வளரும்போதே பறிகொடுக்க நேர்ந்தது.
இங்கிலாந்தில் உள்நாட்டுப் போரின்போது வொட்சன் பிரெஸ்பிடீரியன் கோட்பாடுகளில் ஆர்வம்காட்ட ஆரம்பித்தார். நாட்டின் அரசனை அவர் சார்ந்து நின்றார். முதலாம் சார்ள்ஸ் கொலை செய்யப்படலாம் என்ற நிலை எழுந்தபோது அதை நிறுத்தும்படி ஒலிவர் குரோம்வெலைச் சந்தித்துப் பேசச் சென்ற பிரெஸ்பிடீரியன் போதகர்களில் ஒருவராக வொட்சன் இருந்தார். அரசனை மறுபடியும் நிலைநிறுத்த முயன்றவர்களில் ஒருவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கிறிஸ்டோபர் லவ், வில்லியம் ஜெங்கின்ஸ் போன்றோரோடு வொட்சன் 1651ல் சிறையில் தள்ளப்பட்டார். அவர் 1652ல் விடுவிக்கப்பட்டு வோல்புரூக்கில் இருந்த ஆங்கிலேய திருச்சபையின் புனித ஸ்டீவன்ஸ் சபையில் போதகராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் தேர்ந்த பிரசங்கத்தின் காரணமாக வொட்சனின் பெயர் நாடெங்கும் பிரசித்தி பெற்றது.