மேலைத்தேய நாடுகளில் இன்று கிறிஸ்தவம் தலைகீழாக மாறி சத்தியத்துக்கு விரோதமாக நாளாந்தம் போய்க்கொண்டிருப்பதை அந்நாடுகளில் வாழும் வாசகர்கள் அறிவார்கள். கீழைத்தேய நாடுகளில் அந்தளவுக்கு இன்றுவரையில் தீவிரமான பிரச்சனைகளைக் கிளப்பாமல் இருக்கும் தன்னினச் சேர்க்கை (ஓரினச் சேர்க்கை), ஓரினத் திருமண பந்தம், தீவிர பின்நவீனத்துவ சிந்தனைகளும் போக்கும், திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழும் வாழ்க்கைமுறை, தகப்பனில்லாத பிள்ளைவளர்ப்பு, உடலுறவு விஷயத்தில் திருமணத்துக்கு வெளியில் கட்டுப்பாடற்ற நடைமுறை போன்றவை சமுதாயத்தில் வெறும் சாதாரண விஷயங்களாக அதோடு ஒன்றிப்போய் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பெருந்தொல்லை தரும் அம்சங்களாக மாறிவிட்டிருக்கின்றன. திருநங்கைகளுக்கான கழிவறை என்று ஆரம்பித்து, ஆணும் பெண்ணும் ஒரே கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்றளவுக்கெல்லாம் பேச்சு இன்று அடிபடுகிறது. Target என்ற விற்பனையகம் அமெரிக்கா முழுவதும் தன்னுடைய விற்பனையகங்களில் இதை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. இதனால் இதுவரை ஒரு மில்லியன் பேர் Target விற்பனையகத்தைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இவையெல்லாம் சமுதாயத்தின் அடித்தளத்தையே அசைத்து கிறிஸ்தவ சமுதாயத்தையும் அதிரவைத்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய ‘சமுதாய அசிங்கங்களை’ (இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது எனக்குத் தவறாகப்படவில்லை. அரசியல் இங்கிதம் (Political correctness) நமக்கு வேதவிஷயங்களில் இருக்கக்கூடாதென்று நான் உறுதியாக நம்புகிறேன்.) கிறிஸ்தவ சமுதாயம் உணர்ந்து அவற்றில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுவதோடு, இத்தகைய சூழ்நிலையில் சுவிசேஷத்தை அறிவிக்கும் அதீததுணிவையும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இன்றிருக்கிறது.