ஜொனத்தன் லீமென் எழுதிய ‘சபை அங்கத்துவம்’ நூலும், இதுபற்றி விரிவாக எழுதப்பட்ட அவருடைய இன்னொரு நூலும் என்னை அதிகம் சிந்திக்கவைத்தன; இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு ஒரு காரணமாக அமைந்தன. முப்பத்திஐந்து வருடங்களாக நான் திருச்சபையில் போதகப்பணியில் இருந்துவருகிறேன். என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை ஆரம்பித்த காலத்திலேயே நின்று நிலைத்துப்போன அசைக்கமுடியாத நம்பிக்கை திருச்சபை பற்றியது. அதற்கு நான் ஆண்டவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அந்த நம்பிக்கை அன்றே என்னில் ஆணிவேராகப் பதிந்திருக்காவிட்டால் இன்று என்ன செய்துகொண்டிருந்திருப்பேன் என்பதை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த முப்பத்திஐந்து வருடகால கிறிஸ்தவ பணியில் என்னோடு நெருங்கியிருந்து உறவாடிய நண்பர்களும், அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் பழக்கமானவர்களும் அநேகர். இவர்களில் திருச்சபை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் கிறிஸ்தவ சாகரத்தில் என்னென்னவெல்லாமோ செய்து நீச்சலடித்துக்கொண்டிருக்கிறவர்கள் தொகை ஏராளம்.