கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூழல்
(பக்தி வைராக்கியம் – 3)
– டேவிட் மெரெக் –
உங்களுடைய விரலில் ஒன்று துண்டிக்கப்பட்டால் என்னவாகும்? அதன் செயல்பாடு எப்படியிருக்கும்? நிச்சயமாக நன்றாக இருக்காது, இல்லையா? உயிரும் ஆரோக்கியமுமுள்ள சரீரத்தோடு இணைந்திருந்தால் மட்டுமே அது மற்ற விரல்களோடு சேர்ந்து சரியாக இயங்க முடியும். இதே நிலைதான் என்னுடைய காலுக்கும், ஈரலுக்கும், தலைக்கும். இந்த ஆக்கத்தில், நம்முடைய உடலைப் பற்றிய இந்த உண்மை நம்முடைய கிறிஸ்தவ வைராக்கியத்திற்கும் பொருந்தும் என்பதைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்.
பக்தி வைராக்கியத்தைப் பற்றிய போதனைத் தொடரில் இதுவரை இரண்டு ஆக்கங்களைத் தந்திருக்கிறேன். அதில் முதலாவதாக, தீத்து 2:13-14 வசனங்களிலிருந்து பக்தி வைராக்கியம் கடவுளிடமிருந்தே வருகிறது என்பதைப் பார்த்தோம். பின்பு, தீத்து 2:13-14 வசனங்களை எழுதிய அதே பவுல் ரோமர் 12:11ல், பக்தி வைராக்கியம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பொறுப்பாக இருக்கிறது என்று விளக்கியிருப்பதைப் பற்றி விரிவாகப் படித்தோம். கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம், நம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டியதும் தக்கவைத்துக்கொள்ள வேண்டியதுமான நம்முடைய பொறுப்பாக இருக்கிறது.