(பக்தி வைராக்கியம் – 4)
– டேவிட் மெரெக் –
[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.]
வைராக்கியத்தைப் பற்றி ஒரு கிறிஸ்தவ எழுத்தாளர் சொல்லிய சில வரிகளைக் குறிப்பிட்டு இந்த ஆக்கத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன்.
வைராக்கியமான கிறிஸ்தவன் என்பவன் தேவபக்திக்குரிய காரியங்களில் அக்கறையுடனும், ஆர்வத்துடனும் அதை அடைய வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியும் கொண்டவனாக இருப்பான். அவனுடைய நடவடிக்கையிலும் வாழ்க்கையிலும் ஒரு வேகம் இருப்பதைப் பார்க்கலாம். அவன் ஒரு மந்தமான, தளர்வான கிறிஸ்தவன் அல்ல. அவன் விழிப்புடன் கூடிய மனதோடு முன்னேறுகிறவனாக இருப்பவன். அவன் தன் கொள்கைகளில் உறுதியாக நிற்கிறவன். எந்தவித பயமுமின்றி கடவுளுக்காகவும் சத்தியத்திற்காகவும் போராடுகிறவன். மதரீதியான காரியங்களுக்கு வலிமையாக கட்டுப்பட்டவன். அவன் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்காக தொடர்ந்து செயல்படுகிறவனாகவும் முன்னோக்கி செல்லுவதில் ஆர்வம் கொண்டவனாகவும் இருப்பான். அவனுடைய இந்த ஆர்வம் வெற்றியை அவனுக்கு சொந்தமாக்கும்.