1517ல் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் கத்தோலிக்க மதத்திற்கெதிரான தன்னுடைய போதனைகளை 95 குறிப்புகளாக எழுதி ஜெர்மனியில் விட்டன்பேர்க் எனும் இடத்தில் இருந்த கோட்டைக் கதவில் பதித்தார். அக்காலத்தில் முக்கியமான மத, அரசியல் விவாதங்களில் ஈடுபடுகிறவர்கள் இவ்வாறு செய்வது வழக்கம். இதன் மூலம் இந்தக் குறிப்புகள் பற்றி தன்னோடு விவாதத்தில் ஈடுபட கல்விமான்களுக்கும், மதகுருமாருக்கும் லூத்தர் அழைப்புவிடுத்தார். இந்தத் 95 குறிப்புகளை எழுதி போப் 10ம் லியோவுக்கு எதிராக மார்டின் லூத்தர் போராட்டத்தை ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணமுண்டு. அன்று போப் லியோ ரோம் நகரத்தில் செயின்ட் பீட்டர்ஸ் பெசீலிக்காவை கட்டுவதற்கு மக்களிடம் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். லூத்தரை மனக்கசப்படையச் செய்தது பெசீலிக்கா கட்டியது அல்ல; அதைக் கட்டுவதற்கு போப் பணம் சேர்த்தவிதமே. போப் லியோ மக்களிடம் பணம் பெறுவதற்காக, பெசீலிக்கா கட்டுவதற்கு அவர்கள் கொடுக்கும் பணத்தொகைக்கேற்ப அவர்களுடைய பாவங்களை மன்னித்து பாவமன்னிப்புப் பத்திரத்தைத் தானே கையெழுத்திட்டு வழங்குவதாக உறுதிமொழி தந்திருந்தார். இதுவே லூத்தரைக் கொதிப்படையச் செய்தது.