சென்ற இதழில், நாம் பக்திவைராக்கியத்தின் அநேக ஊக்கப்படுத்தும் சாதகமான உதாரணங்களில் நம்முடைய கவனத்தை செலுத்தினோம். எனினும், அத்தகைய நல்ல உதாரணங்களும் நம்மில் ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு உண்டு. அதாவது, உண்மையான விசுவாசிகளுக்கும் சுவிசேஷ ஊழியர்களுக்கும் பக்திவைராக்கியம் பற்றிய விஷயங்களில் அவர்களுக்கு ஒருபோதும் போராட்டம் ஏற்பட்டதில்லை என்பதுபோல் நமக்குத் தென்படலாம். அப்படியில்லை என்பதை வேதம் தெளிவாகக் காட்டுகிறது. 1 இராஜாக்கள் 18-19 அதிகாரங்களில், முக்கிய கதாபாத்திரமாகிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய எலியாவில் இந்த உண்மை தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பொல்லாதவனாகிய ஆகாப் ராஜாவின் நாட்களில் கலகக்காரராகிய இஸ்ரவேலின் வடபகுதி ராஜ்யத்திற்கு, கடவுளுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய எலியா அனுப்பப்பட்டார். முந்தைய ஆக்கத்தில், வைராக்கியமான, பலனுள்ள ஜெபத்திற்கு நல்ல உதாரணமாக எலியா இருந்ததை நாம் கவனித்தோம். இருந்தும் இந்த உண்மையுள்ள தீர்க்கதரிசியும் கிட்டதட்ட அவிந்துவிடக்கூடிய பக்திவைராக்கியத்தை அனுபவித்திருந்தார். ஊக்கம் குன்றிய, மனஅழுத்தங்கொண்ட பக்திவைராக்கியத்திற்கு அவர் ஓர் உதாரணமாக இருக்கிறார்.