ஒருமுறை ஜெயகாந்தன் சொன்னார், ‘எழுத்து என் ஜீவன்; ஜீவனமல்ல’ என்று. நான் முழுநேரப் படைப்பாளியல்ல; பணத்திற்காகவும் இலக்கியப்பணியில் ஈடுபடவில்லை. எழுதுகிறவனுக்கும் வயிறு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஒரு படைப்பாளி வயிற்றுக்காக இலக்கியம் படைக்கமாட்டான். என் படைப்புகள் பெரும்பாலும் கிறிஸ்தவ வேதத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதற்குக் காரணம் நான் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டிருக்கிறேன். கிறிஸ்தவம் எனக்கு மதமல்ல; என் அடிப்படை நம்பிக்கை, ஜீவன். அதுவே என் பார்வையாக இருக்கிறது. அதற்காக லௌகீக விஷயங்களில் நான் அக்கறை காட்டாமலில்லை. லௌகீகம், ஆவிக்குரியவை என்று பிரித்துப் பார்ப்பது தவறு என்று நம்புகிறவன் நான். ஆண்டவர் நம்மை உலகத்தைத் துறந்து வாழச்சொல்லவில்லை; உலகத்தில் இருந்து வாழச் சொல்லியிருக்கிறார். நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு அது புரியாமலிருக்கிறது. பெரும்பாலானோர் முக்கியமாக ஊழியத்தில் இருக்கிறவர்கள் வேறு தொழில்களைக் குறைத்து மதிப்பிட்டு அதை ஊழியத்தில் இல்லாதவர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று தாங்களே ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறார்கள். வேதம் நீதியான எல்லாத் தொழில்களையும் புனிதமானதாகக் கருதுகிறது.